

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சிறையில் உள்ள நான்கு பேருக்கு நீதிபதி பி.வடமலை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். வழக்கின் விசாரணை வரும் 28-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான், மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன் மற்றும் சந்தோஷ்சமி ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை, உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று (அக். 16) விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்கு சயான், மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன் மற்றும் சந்தோஷ்சமி ஆகிய 10 பேரும் ஆஜராகினர்.
ரயில்வே ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் உயிரிழந்த ஓம் பகதூரின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் அன்வருதீன் சாட்சியம் அளித்தனர்.
இந்நிலையில், நீதிபதி பி.வடமலை, சிறையில் உள்ள ஜித்தின் ஜாய், உதயன், பிஜின் குட்டி, மனோஜ் சாமி ஆகிய நான்கு பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், வழக்கின் விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.