Published : 16 Oct 2020 02:32 PM
Last Updated : 16 Oct 2020 02:32 PM

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை எனத் தமிழக அரசு முடிவு; மத்திய அரசுக்குக் கடிதம் வாயிலாகத் தெரிவிக்க வேண்டும்: ஸ்டாலின்

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்வதற்கு, பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் தமிழக ஆளுநருக்கு முதல்வர் பழனிசாமி உடனடியாகப் பரிந்துரை செய்ய வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் மத்திய அரசுக்கு துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதம் அவரால் தன்னிச்சையாக அனுப்பப்பட்டுள்ளது எனவும், இதனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் 69% இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் எனவும், மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் பல்கலைக்கழகம் சென்றுவிடும் எனவும், திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்தன.

இதனால், தன்னிச்சையாக கடிதம் எழுதிய சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் முன்பாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி அறிவித்ததன்படி நேற்று (அக். 15) திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் உயர் சிறப்பு தகுதி, தமிழக மாணவர்களுக்கான 69% இட ஒதுக்கீட்டைப் பாதிக்கும் நிலை உள்ளது எனவும், மாணவர் நலனைப் பாதிக்கும் வகையிலான உயர் சிறப்பு தகுதி அண்ணா பல்கலைக்கழகத்துக்குத் தேவையில்லை எனவும், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று (அக். 16) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட முகநூல் பதிவு:

"திமுகவின் கடும் எதிர்ப்பு, திமுக இளைஞரணி மற்றும் மாணவரணியின் சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் எழுச்சிமிகு போராட்டம் ஆகியவற்றுக்குப் பிறகு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், 'அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை எனத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது' என்று அறிவித்துள்ளது காலதாமதமானது என்றாலும்; வரவேற்கத்தக்கது.

அமைச்சர் இப்படிப் பேட்டி கொடுப்பதைவிட, தமிழக அரசின் இந்த முடிவினை உடனடியாக மத்திய அரசுக்குக் கடிதம் வாயிலாக, வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

அரசின் கொள்கை முடிவில் தலையிட்டு, தன்னிச்சையாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி, மிகப்பெரிய பிரச்சினையை உருவாக்கிய, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்வதற்கு, பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் தமிழக ஆளுநருக்கு முதல்வர் பழனிசாமி உடனடியாகப் பரிந்துரை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்".

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x