புதுச்சேரியில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தாமரை மலரும்: பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி பேட்டி

சி.டி.ரவி: கோப்புப்படம்
சி.டி.ரவி: கோப்புப்படம்
Updated on
1 min read

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரியில் தாமரை மலரும் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில நிர்வாகிகள் குழு கூட்டத்தில் பங்கேற்க பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, பாஜக அலுவலகத்துக்கு இன்று (அக். 16) வந்திருந்தார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"பாஜகவில் இணைய விரும்பி பல தலைவர்கள், இதர கட்சி எம்எல்ஏக்கள் எங்களைத் தொடர்பு கொண்டுள்ளனர். எங்களின் அடிப்படை இலக்கு கட்சியைப் பலப்படுத்துவதுதான். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரியில் தாமரை மலரும்.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு முழு தோல்வியைடைந்துள்ளது. கரோனா காலத்தில் இது வெளிப்படையாகியுள்ளது. அதனால்தான் புதுச்சேரியை தமிழகத்துடன் மத்திய அரசு இணைக்க உள்ளதாக தவறான பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். மத்திய அரசுக்கு அதுபோல் திட்டம் ஏதுமில்லை. தங்கள் தோல்வியை மறைக்கவே பாஜக மீது பொய் குற்றச்சாட்டை முதல்வர் நாராயணசாமி சுமத்துகிறார். அதை எப்படி எழுப்புகிறார் என்று தெரியவில்லை. மத்திய அரசுக்கு அதுபோல் திட்டமில்லை. பொய்யான குற்றச்சாட்டு.

பாஜக தலைமை அலுவலகமாக ராஜ்நிவாஸ் செயல்படுவதாகக் கூறும் முதல்வரின் குற்றச்சாட்டு தவறானது. மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனச் சாலையில் நாங்கள் போராடுகிறோம். நாங்கள் ஆளுநர் அலுவலகத்தைப் பயன்படுத்துவதில்லை. அதேபோல், புதுச்சேரியில் ஆளுநர் மாற்றம் உள்ளதா என்ற கேள்வியும் கட்சி அரசியலுக்குத் தொடர்பில்லாதது.

மோடியின் தலைமையை ஏற்போருடன் இணைந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திப்போம். நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து தேர்தல் தொடர்பான பிரச்சார வழிமுறைகளை வடிவமைப்போம்".

இவ்வாறு சி.டி.ரவி தெரிவித்தார்.

பேட்டியின் போது பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in