

தனது தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி வாக்காளர் தொடர்ந்துள்ள வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தேனி தொகுதி வாக்காளர் மிலானி தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரநாத் குமார், வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றுள்ளார். எனவே, அவரது தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "தொகுதி வாக்காளர் என்ற அடிப்படையில் மிலானி என்பவர் தொடர்ந்துள்ள இந்த வழக்கு செல்லத்தக்கது அல்ல. மேலும், தேர்தல் வழக்குத் தொடர்வதற்கான உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்" எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் இன்று (அக். 16) விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, ''ரவீந்திரநாத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளது. எனவே, தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தொடர்ந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்படுகிறது'' என்று உத்தரவிட்டார்.
ரவீந்திரநாத்துக்கு எதிரான தேர்தல் வழக்குத் தொடர்ந்து நடைபெறும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.