

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நிலையில் வேலையும் இல்லாமல் வாழ்வாதாரமும் இல்லாமல் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆங்காங்கே பல்வேறு மாநிலங்களில் திண்டாடினார்கள், நினைத்துக் கூட பார்க்க முடியாத தூரத்தை நடந்தே கடந்தார்கள், சைக்கிளில் கடந்தார்கள்.
நாட்டின் மிகப்பெரிய புலம்பெயர்வு இது என்று அழைக்கப்பட்டது, பலர் இறந்தே போனார்கள், இது குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்ட போது எத்தனை புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்தார்கள் என்ற கணக்கு வைத்திருக்கவில்லை என்று மத்திய அரசு பதிலளித்தது.
இந்நிலையில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள், தேங்கிய மாணவர்களை சொந்த ஊர் அழைத்து வர ரயில்வே நிர்வாகம் ஷ்ரமிக் சிறப்பு ரயில்களை இயக்கியது.
இதில் அதிகபட்சமாக 265 ஷ்ரமிக் ரயில்களை தமிழ்நாடு அரசு இயக்கியது. இதன் மொத்த செலவு ரூ.34.6 கோடியாகும். இதன் மூலம் 3.54 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் சென்றடைந்தனர்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான பயணியர் கட்டணத்தில் மத்திய அரசு பங்களிப்பு எதுவும் இல்லை என்று பாண்டியாராஜா என்பவர் மேற்கொண்ட தகவலுரிமைச் சட்ட விசாரிப்புக்கான பதிலில் தெற்கு ரயில்வே பதில் அளித்துள்ளது.
அதாவது தமிழகத்திலிருந்து இயக்கப்பட்ட ஷ்ரமிக் சிறப்பு ரயில்களுக்கான கட்டணங்களில் மத்திய அரசு பங்களிப்பு எதுவும் இல்லை என்பதே ஆர்டிஐ தகவலில் பெறப்பட்ட விஷயமாகும்.
சிறப்பு ரயில்களில் ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள் இருந்தன, இதில் மாநில அரசுகளால் அடையாளம் காணப்பட்டவர்கள் மட்டும் பயணம் செய்தனர். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அன்ரிசர்வ்டு என்ற முன்பதிவில்லாத உடனடிப் பயண டிக்கெட்டுகள் மாநில அரசுகளால் வழங்கப்பட்டன.
தெற்கு மாநிலங்களில் யூனியன் பிரதேசம் உட்பட அதிக ஷர்மிக் சிறப்பு ரயில்களை இயக்கியது தமிழ்நாடுதான். மொத்தம் தெற்கு ரயில்வே 507 சிறப்பு ஷ்ரமிக் ரயில்களை இயக்கியதில் பாதிக்கும் மேல் தமிழ்நாட்டிலிருந்துதான் இயக்கப்பட்டது. மே-ஆகஸ்ட் மாதங்களில் சுமார் 7.35 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு இந்த ரயில் மூலம் சென்றனர்.
“264 ஷ்ரமிக் சிறப்பு ரயில்களில் பயணம் செய்தோருக்கு தமிழக அரசே அனைத்து ரயில் கட்டணங்களையும் செலுத்தியது. ஒரேயொரு ரயிலுக்கு மட்டும் உத்தராகண்ட் மாநிலம் கட்டணம் கொடுத்தது. இது உத்தரகாண்ட் அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க இயக்கப்பட்டிருக்கலாம்” என்கிறார் ஆர்டிஐ செயல்பாட்டாளர் பாண்டியராஜா.
தெற்கு ரயில்வே இந்த ரயில்கள் மூலம் வசூலித்த ரூ.66.28 கோடியில் ரூ.34.6 கோடி தமிழ்நாடு அரசின் பங்களிப்பு ஆகும்.
இந்த ரயில்கள் மாநிலம் முழுதும் 26 ரயில் நிலையங்களிலிருந்து இயக்கப்பட்டன.
எம்ஜிஆர் செண்ட்ரல் சென்னை ரயில் நிலையத்திலிருந்து 77 ரயில்களும், திருப்பூர், கோவையிலிருந்து தலா 34 ரயில்களும் திருவள்ளூரிலிருந்து 22 ரயில்களும் சென்னை எழும்பூரிலிருந்து 15 ரயில்களும் இயக்கப்பட்டன.
கர்நாடகாவிலிருந்து 21 ரயில்கள் இயக்கப்பட்டதில் 19 ரயில்களுக்கு அந்த மாநிலமே பயணிகள் கட்டணம் செலுத்தியது. புதுச்சேரியிலிருந்து 3 ரயில்கள் இயக்கப்பட்டதில் ஒரு ரயிலுக்கு மட்டும் பயணக்கட்டணம் அளித்தது.
தமிழ்நாட்டுக்கு அடுத்த படியாக 218 ரயில்களை கேரளா இயக்கியது, இதில் 53 ரயில்களுக்கு மட்டுமே கேரளா அரசு பயணக்கட்டணம் செலுத்த முடிந்தது, காரணம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தங்குமிடம், உணவு, மருத்துவம் ஆகியவற்றுக்கு கேரள அரசு நிறைய செலவிட்டது, என்றார் பாண்டியராஜா.
-தி இந்து (ஆங்கிலம்)