Published : 16 Oct 2020 11:55 AM
Last Updated : 16 Oct 2020 11:55 AM

பழநி பஞ்சாமிர்தம் தயாரிக்க ஈரோடு நாட்டுச்சர்க்கரை: 6 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கொள்முதல்

பழநி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்காக, கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருந்து நாட்டுச் சர்க்கரை கொள்முதல் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று மீண்டும் தொடங்கியது. ஈரோடு மாவட்டம் கோபி, கவுந்தப்பாடி பகுதியில் விளையும் கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் நாட்டுச்சர்க்கரை, பழநிமுருகன் கோயில் பஞ்சாமிர்தம் தயாரிப்பிற்காக கடந்த 25 ஆண்டுகளாக கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. பழநி முருகன் கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு வந்து விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்து வந்தனர். பல்வேறு காரணங்களால் இந்த கொள்முதல் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது.

பழநி முருகன் கோயில் தேவஸ்தான நிர்வாகம், கவுந்தப்பாடியில் இருந்து மீண்டும் நேரடியாக நாட்டுச் சர்க்கரை கொள்முதலைத் தொடங்க வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். ஈரோடு மாவட்ட ஆட்சியராக எஸ்.பிரபாகர் பணியாற்றியபோது, இப்பிரச்சினை தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை கவனத்துக்கு கொண்டு சென்றார்.

தற்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக எஸ்.பிரபாகர் பொறுப்பேற்றுள்ள நிலையில், விவசாயிகளின் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்துள்ளது. இதன் காரணமாக ஆறு ஆண்டுகளுக்குப்பிறகு, பழநி தேவஸ்தான நிர்வாகம், கவுந்தப்பாடியில் இருந்து நேரடி நாட்டுச் சர்க்கரை கொள்முதலை நேற்று தொடங்கியது.

பழநி தேவஸ்தானம் பஞ்சாமிர்தம் தயாரிக்க நாட்டுச் சர்க்கரையை கொள்முதல் செய்யும் பணியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். இதுதொடர்பாக அமைச்சர் கருப்பணன் கூறும்போது, ‘ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பழநி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் தயாரிப்பிற்காக, 42.8 டன் நாட்டுச்சர்க்கரையைக் கொள்முதல் செய்யும் பணி தொடங்கியுள்ளது.

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நாட்டுச் சர்க்கரை 60 கிலோ மூட்டைக்கு ரூ.2490 வீதம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டுச் சர்க்கரையை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர், என்றார். இந்நிகழ்வில் பழநி கோயில் செயல் அலுவலர் நடராஜ், பஞ்சாமிர்தம் தயாரிப்பு கண்காணிப்பாளர் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x