சிறுமுகை அருகே அஸ்திவாரத்தோடு நின்றுபோன தடுப்பணையை கட்டிமுடிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

சிறுமுகை ஏழு எருமைப் பள்ளத்தில் அஸ்திவாரம் கட்டியதோடு நின்றுபோன தடுப்பணை.
சிறுமுகை ஏழு எருமைப் பள்ளத்தில் அஸ்திவாரம் கட்டியதோடு நின்றுபோன தடுப்பணை.
Updated on
1 min read

கோவை மாவட்டம் சிறுமுகை அருகேயுள்ள பகத்தூரில் ஏழு எருமைப் பள்ளம் உள்ளது. பெரியநாயக்கன்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்யும் மழைநீர், இப்பள்ளத்தை வந் தடைந்து, பின்னர் பவானி ஆற்றில் கலக்கிறது.

இப்பகுதியில் தடுப்பணை கட்டி மழை நீரை தேக்கி வைத்தால், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும் என்று கூறுகின்றனர், விவசாயிகள்.

இது குறித்து சிறுமுகைப் பகுதி விவசாயிகள் கூறியதாவது:

காரமடை அடுத்த சிக்காரம்பாளையம், பெள்ளாதி, பெள்ளேபாளையம், இலுப்பநத்தம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் இருந்து இப்பள்ளத்துக்கு வரும் தண்ணீரை தடுக்கும் வகையில், சுமார் 10 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் மழை நீர் தேக்கப்படுவதால், சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகள் நீராதாரம் பெறுகின்றன. ஏழு எருமைப் பள்ளம் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்த நிலையில் தடுப்பணைஇருந்தது. அதை இடித்துவிட்டு புதிய அணை கட்டும் பணி கடந்தஆண்டு தொடங்கப் பட்டு, அஸ்திவாரம் அமைத்ததோடு நின்று விட்டது. இந்த தடுப்பணையில், மழைக் காலத்தில் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கும். இரண்டு மூன்று மாதங்களில், அடுத்தடுத்து மழை பெய்தால், ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கும்.

பருவமழையின்போது, இப்பள்ளத்தில் இருமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பிட்ட காலத்தில் தடுப்பணை கட்டியிருந்தால், மழைநீரை சேமித்திருக்க முடியும். எனவே, தடுப்பணையை விரைவாக கட்டி முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in