

திருச்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமாகா விவசாய அணி மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன் உருவப்படத்தை திறந்து வைத்து, அவரது குடும்பத்துக்கு கட்சி சார்பில் ரூ.3 லட்சம் நிதியுதவியை வழங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
விவசாயிகளின் வளர்ச்சி, வருங்கால வருமானம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய வேளாண் சட்டங்கள் அமைந்துள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் கண்மூடித்தனமாக அரசியல் காரணங்களுக்காக வேளாண் சட்டம் குறித்து அச்சுறுத்தும் தகவல்களைக் கூறி வருகின்றன. நீட் தேர்வு ரத்து, வேளாண் சட்டம் ரத்து என நடைமுறைக்கு சாத்தியமில்லாததை நடைமுறைப்படுத்துவதாக திமுக கூறிக்கொண்டிருக்கிறது. நெல் கொள்முதல் நிலையங்களை ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படுத்த வேண்டும். மாயனூர் முதல் நாகப்பட்டினம் வரை 44 இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்றார்.