Published : 16 Oct 2020 07:54 AM
Last Updated : 16 Oct 2020 07:54 AM

முதல்வர் பழனிசாமியின் தாயாரின் அஸ்தி காவிரியில் கரைப்பு: அமைச்சர்கள், அதிமுகவினர் உட்பட பலர் பங்கேற்பு

எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையத்தில் நடைபெற்ற மூன்றாம் நாள் காரியத்துக்குப் பின்னர்முதல்வர் பழனிசாமியின் தாயாரின் அஸ்தி காவிரியில் கரைக்கப்பட்டது.

தமிழக முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93) கடந்த 12-ம் தேதி காலமானார். அவரது மூன்றாம் நாள் காரியம் (சாங்கியம்) சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையத்தில் உள்ள காவிரிக் கரையில் நேற்று நடைபெற்றது.

இதில், முதல்வர் பழனிசாமி அவரது மூத்த சகோதரர் கோவிந்தராஜூ ஆகியோர் பங்கேற்றனர். பின்னர், முதல்வரின் தாயாரின் அஸ்தி காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது.

இதில், தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் மற்றும் முதல்வரின் உறவினர்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, சிலுவம்பாளையம் வந்த பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முதல்வரின் தாயார் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தார். பின்னர், முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

சென்னை: முதல்வர் பழனிசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தங்களின் தாயார் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறேன். அவர் உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பலமாகவும், உத்வேகம் அளிப்பவராகவும் இருந்துள்ளார். இந்திய கலாசாரத்தில் தாய் கடவுளுக்கு சமமானவர். வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் தாயாரின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கும். உடலால் அவர் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவரது நினைவுகள் வாழ்க்கையில் உங்களுக்கு வழிகாட்டும். உங்களின் தாயாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x