

பொள்ளாச்சி கோட்டூர் சாலைபகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமார் (40). வாகனங்களுக்கு ‘பைனான்ஸ்’ தரும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 13-ம்தேதி தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது கோட்டூர் சாலை பாலத்தின் அருகே எதிரே காரில் வந்தவர்கள் சாந்தகுமாரை தாக்கி காரில்ஏற்றி கை, கால்களை கட்டி தாமரைகுளம் பகுதியில் உள்ள தனியார்தோட்டத்துக்கு கடத்திச் சென்றனர். அங்கு கத்தியைக் காட்டி ஒருகோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். சாந்தகுமார் பணம் தரமறுத்ததால் அவரை தாக்கியவர்கள் சென்றான்பாளையம் பகுதியில் சாலையோரத்தில் தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர்.
அங்கிருந்து தப்பி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சாந்தகுமார், நேற்று முன்தினம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து, சாந்தகுமாரை கடத்தியவர்களை தனிப்படை அமைத்து தேடினர்.
இந்நிலையில், பொள்ளாச்சி அடுத்த மோதிரம்புரம் பகுதியில் இருந்த கண்ணன்(51), நவீன் குமார்(27), ஸ்டாலின்(30), ஜான்சன்(26) ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர். கண்ணன் பொள்ளாச்சி நகராட்சியின் முன்னாள் திமுக கவுன்சிலர் ஆவார். கடத்தலுக்கு உடந்தையாக இருந்தபாலாஜி, சதீஸ் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.