Published : 16 Oct 2020 07:44 AM
Last Updated : 16 Oct 2020 07:44 AM

816 கொள்முதல் நிலையங்கள் இயங்குகின்றன; அக்.1 முதல் 1.55 லட்சம் டன் நெல் கொள்முதல்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் காமராஜ் பதில்

அக்டோபர் 1-ம் தேதி முதல் இதுவரை 1.55 லட்சம் டன்நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை 816 கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன என்று உணவு, நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

முதல்வர் பழனிசாமி உத்தரவுப்படி கடந்த 2019-20 கொள்முதல் பருவத்தில் 2,135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 2019 அக்.1 முதல் 2020 செப்.30 வரை 32.41 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக 1,500 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் நிலையில், 2019-20 பருவத்தில் வரலாறு காணாத வகையில் 2,135 நிலையங்கள் திறக்கப்பட்டன.

இதன்மூலம், சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மாநில அரசு வழங்கும் ஊக்கத் தொகை ரூ.205 கோடி சேர்த்து மொத்தம் ரூ.6,130 கோடி நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் 5.85 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

கொள்முதலில் சாதனை

தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச கொள்முதல் செய்து அரசு சாதனை படைத்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் மட்டும் 12.77 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மொத்தம் ரூ.2,416.05 கோடி நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் 2.48 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறப்பு, நல்ல பருவமழை, தட்டுப்பாடின்றி இடுபொருட்கள் கிடைக்க ஏற்பாடு, கடைமடை வரை வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டது ஆகியவற்றால் நெல் விளைச்சல் அமோகமாக உயர்ந்துள்ளது.

குறுவை பருவத்துக்கான நெல்லை கொள்முதல் செய்யஅறுவடை கால தொடக்கத்திலேயே, அதாவது கடந்த 1-ம் தேதியே 591 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. தற்போது வரை 816 நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதுவரை 1.55 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், ‘விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை முழுவதையும் கொள்முதல் செய்ய அரசு அதிகாரிகள் மறுக்கின்றனர்’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவது உண்மைக்கு புறம்பானது. கள நிலவரம் அறியாமல், விவசாயிகளிடம் அரசு பெற்றுவரும் நற்பெயரைக் கண்டு பொறுக்க முடியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அவர் இவ்வாறு கூறிவருகிறார்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x