Published : 16 Oct 2020 07:36 AM
Last Updated : 16 Oct 2020 07:36 AM

திருமண மண்டபங்களுக்கான சொத்து வரியை ரத்து செய்ய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை

திருமண மண்டபங்களுக்கான சொத்து வரியை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு கல்யாண மண்டப உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கடந்த ஜூலை மாதம் தொடரப்பட்ட வழக்கில், ‘‘கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24 முதல் தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கடந்த மார்ச் 16-ம் தேதிக்கு முன்பாக முன்பதிவு செய்யப்பட்ட திருமணங்களை மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்றும், அதன்பிறகு முன்பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் ரத்து செய்யப்படுவதால் முன்பதிவுக்காக வாங்கிய முன்பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையால் திருமண மண்டப உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திருமண மண்டபங்களை பராமரிக்கவும், வேலையாட்களுக்கு ஊதியம் திண்டாடி வரும் நிலையில், முன்பதிவுக்கான தொகையை திருப்பிக்கொடுக்க வேண்டும் என நிர்பந்தம் செய்யக்கூடாது என அறிவுறுத்த வேண்டும்.

இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அத்துடன் திருமண மண்டபங்களுக்கான சொத்து வரியையும் ரத்து செய்ய வேண்டும். மேலும் திருமணத்துக்காக வாங்கிய முன்பணத்தை திருப்பிக்கொடுப்பது என்பது சிவில் விவகாரம் என்பதால் இதில் போலீஸார் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் தலையிட தடை விதிக்க வேண்டும்” என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகசுந்தர், ‘அரசாணைப்படி பொதுமக்களிடம் பெற்ற முன்பணத்தை திருப்பி செலுத்த வேண்டியது மண்டப உரிமையாளர்களின் கடமை. இதில் அதிகாரிகள் தலையிடக்கூடாது எனக்கோருவது ஏற்புடையதல்ல’ என வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் நவ.23-க்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x