

பல்லாவரம் அருகே, பம்மல் நகராட்சியில் தனியார் தொழிற்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பல்லாவரம் அருகே பம்மல் நகராட்சிநாகல்கேணி அருகே பூம்புகார் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்நகரை ஒட்டியுள்ள தனியார் தொழிற்சாலையை சுற்றி, 12 அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் உள்ளது. இதில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில், சுமார் 100 அடி நீளத்துக்கு மிகவும் சேதமடைந்து விரிசல் ஏற்பட்டு சாய்ந்த நிலையில் உள்ளது.
மழைக்காலத்தில் சுற்றுச்சுவர் இடிந்துவிழும் வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் உயிர்ச்சேதம் ஏற்படும் எனவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் இச்சுவரின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு சுவர் முழுவதும் இடிந்துவிழும் நிலையில் உள்ளது. தொடர்புடைய தொழிற்சாலை நிர்வாகத்திடம் சுற்றுச்சுவரை சீரமைக்கும்படி வலியுறுத்தியும், நிர்வாகம் மெத்தனமாகவே இருந்துவருவதாகச் சொல்லப்படுகிறது.
இதுதொடர்பாக பம்மல் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ள ‘அன்பறம்’ அறக்கட்டளைத் தலைவர் இரா.கந்தவேலு கூறியதாவது: பம்மல், பூம்புகார் நகரில் உள்ள பெங்கால் டேனரி தோல் தொழிற்சாலையின் 12 அடி உயரமும் 100 அடி நீளமும் கொண்ட மதில் சுவர் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இச்சுவர் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. கோவை மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்தது போல் நடைபெறாமல் இருக்க, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பம்மல் நகராட்சிக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளோம் என்றார்.
இதுகுறித்து பம்மல் நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, “பொதுமக்களிடம் இருந்து புகார் வரப்பெற்றதை அடுத்து அந்த இடத்தை ஆய்வு செய்தபோது, சுற்றுச்சுவரின் சேதம்தெரியவந்துள்ளது. இதையடுத்து தொழிற்சாலை நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பிஉள்ளோம். நிர்வாகமும் சுற்றுச்சுவரை இடித்துவிட்டு புதிய சுவர் கட்ட இருப்பதாகவும், அப்பணிகளை கரோனா காரணமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும், விரைவில் பணிகள் தொடங்கும் என தெரிவித்தனர். விரைந்து பணியை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம்” என அதிகாரிகள் தெரிவித்தனர்.