

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பயோமெட்ரிக் முறை குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் கூட்டுறவு சங்க பதிவாளர் இல.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 418 முழுநேர நியாயவிலை கடைகள் மற்றும் 234 பகுதிநேர நியாய விலை கடைகள் என மொத்தம் 652 கடைகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின்கீழ் பயோமெட்ரிக் முறை மூலம் எந்த பகுதியில் உள்ளவரும் எந்த நியாயவிலைக் கடையிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கூட்டுறவு சங்க பதிவாளருமான இல.சுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நியாயவிலை கடை, காந்தி நகர் பகுதி நியாய விலை கடை ஆகிய இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
பின்பு நியாயவிலை கடைஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். இந்த ஆய்வின்போது கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, நுகர்பொருள் வாணிப கழக பொது மேலாளர் செந்தில்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் கமலநாதன், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் மணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.