குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குறைகளை கேட்டறிந்த காவல் துறை: நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதி

குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குறைகளை கேட்டறிந்த காவல் துறை: நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதி
Updated on
1 min read

குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் காவல் துறை அதிகாரிகள் நடந்து சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர். தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர்.

சென்னை பெருநகரில் குற்றங்களைக் குறைக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் காவல் ஆணையர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒருபகுதியாக பொதுமக்கள் மற்றும் காவல் துறை நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பொதுமக்களிடம் நேரில் சென்று குறைகளைக் கேட்க வேண்டும். அதன் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாருக்கு காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டார்.

அதன்படி, வளசரவாக்கம் சரகக் காவல் உதவி ஆணையர் மகிமைவீரன் தலைமையில், ராயலா நகர் காவல் நிலைய ஆய்வாளர் சாம்சன் சேவியர் ராஜ் அடங்கிய தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு ராயலாநகர் பகுதிக்கு உட்பட்ட வ.உ.சி.தெரு, திருமலை நகர், ராமாபுரம் ஆகிய பகுதிகளுக்கு நடந்து சென்று, காவல் துறை மற்றும் பொதுமக்களிடைேய நல்லுறவு ஏற்படும் விதமாக பொதுமக்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடினர்.

மேலும் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து ஏதாவதுசந்தேக நபர்கள், குற்றச்சம்பவங்கள் பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படியும் காவல் அதிகாரிகள் தங்களது செல்போன் எண்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

குற்றத் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் அதிகம் வசிக்குமிடங்கள், தனிமை வீடுகள் அமைந்துள்ள பகுதிகளில் மக்களை சந்தித்து குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in