வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி நிலம் மீட்பு

வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி நிலம் மீட்பு
Updated on
1 min read

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக, வடக்கு ராஜகோபுரம் சந்நிதி தெருவில் வாகன மண்டபத்தோடு சுமார் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இப்பகுதியில் 18 சென்ட் நிலத்தை,கடந்த 1903-ம் ஆண்டு அலமேலு அம்மாள் என்பவருக்கு, அப்போதைய நிர்வாகம் ஆண்டு வாடகை ரூ.20 என,99 ஆண்டுகளுக்கு குத்தகைவிட்டிருந்ததாக தெரிகிறது.கடந்த 2003-ம் ஆண்டு குத்தகை காலம் நிறைவுற்றதால், கோயில் நிர்வாகம் சார்பில் மண்டபம் மற்றும் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், குத்தகைதாரரின் வாரிசுகளாக வந்த 3 பேர் நிலத்தை ஒப்படைக்க மறுத்ததால், கடந்த 2008-ம் ஆண்டு அறநிலையத் துறைஇணை ஆணையர் சார்பில்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், கடந்த 2013-ம் ஆண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டது. எதிர்தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்தவழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த பிப்ரவரி மாதம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.

இதன்பேரில், வேலூர் இணை ஆணையர் மாரிமுத்து உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் உதவி ஆணையர் ரேணுகாதேவி, செயல் அலுவலர் குமரன், செந்தில், வெங்கடேசன், ஆய்வாளர் கோவிந்தராஜன், கோயில் பணியாளர்கள் மற்றும் திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் முனிசேகர் தலைமையிலான போலீஸார் மேற்கண்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரூ.2 கோடி மதிப்புள்ள வாகனமண்டபத்துடன் கூடிய சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை மீட்டனர். மேலும், அப்பகுதியில் வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகை வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in