

பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு தகுதிச் சான்றை புதுப்பிக்கும்போது குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களிடம் உதிரி பாகங்கள் வாங்கியதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும் என்ற போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் முருகன் வெங்கடாச்சலம் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:
விதிகளுக்கு விரோதமானது
பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு தகுதிச் சான்றை புதுப்பிக்கும்போது வண்டியின் முக்கிய பாகங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கவே மோட்டார் வாகன சட்ட விதிகளில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், தகுதிச் சான்றை புதுப்பிக்கும்போது வாகனங்களின் முகப்பு ஒளிவிளக்கு மற்றும் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள், பிரேக் உள்ளிட்ட உதிரி பாகங்களை பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி 3எம் இந்தியா மற்றும் சென்னை மேல் அயனம்பாக்கம் ஜிப்பி ரீட்டெய்ல் டிரேடிங் ஆகிய 2 தனியார் நிறுவனங்களிடம் வாங்கி, அதற்கான சான்றையும் அந்த நிறுவனங்களிடம் இருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை ஆணையர்கடந்த ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டுள்ளார். ஆணையரின் இந்த உத்தரவு போக்குவரத்து வாகன விதிகளுக்குவிரோதமானது என்பதால் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நவ.26-க்குள் பதிலளிக்க உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும் இதுகுறித்து போக்குவரத்து ஆணையர் மற்றும் தொடர்புடைய தனியார் நிறுவனங்கள் வரும் நவ.26-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.