

மத்திய அரசு ஊழியர்கள், பி.எம்.கேர்ஸ் நிதியத்துக்கு ரூ.157 கோடி நன்கொடை அளித்துள்ளனர். அதில், ரயில்வே ஊழியர்கள் மட்டும் 93 சதவீதம் நிதியுதவி அளித்துள்ளனர்.
கரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கிய பிறகு,கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி,‘பி.எம்.கேர்ஸ் பொதுமக்கள் நிவாரண நிதியம்’ தொடங்கப்பட்டது. இதில் பெறப்பட்ட நிதிகுறித்து தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பத்திரிகை ஒன்று கேள்வி கேட்டிருந்தது.அதற்கு, இந்த நிதியம் தொடங்கி மார்ச்31-ம் தேதிப்படி தொகுப்பு நிதியாக ரூ.3,076 கோடி இருந்தது. இதில் ரூ.3,075.85 கோடி தன்னார்வத்துடன் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே ரூ.146.72 கோடி
மேலும், மத்திய அரசின் 50துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள், பி.எம்.கேர்ஸ் நிதியத்துக்கு ரூ.157.23 கோடி வழங்கிஉள்ளனர். இதில் ரயில்வே ஊழியர்கள் மட்டும் அதிகபட்சமாக 93 சதவீதம், அதாவது ரூ.146.72 கோடி நன்கொடை அளித்துள்ளனர். இந்த தொகைமுழுவதும் ஊழியர்கள், தங்கள்ஊதியத்தில் இருந்தே வழங்கி உள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், மத்திய உள்துறைஅமைச்சகத்தின் கீழ் இயங்கும்பிரதமர் அலுவலகம், அஞ்சல் துறை அலுவலகம் போன்ற சில முக்கிய துறைகள் எவ்வளவு நன்கொடை வழங்கி உள்ளன என்ற விவரங்களை அளிக்கவில்லை.
சிஎஸ்ஆர் திட்டத்தின்படி...
தவிர பி.எம்.கேர்ஸ் நிதியத்துக்கு 38 பொதுத் துறை நிறுவனங்கள், சமூக பொறுப்பு (சிஎஸ்ஆர்) திட்டத்தின்படி ரூ.2,105 கோடி வழங்கி உள்ளன. 7 பொதுத் துறை வங்கிகள், மற்ற நிதி நிறுவனங்கள் ரூ.204.75 கோடி, மத்திய கல்வி நிறுவனங்கள் ரூ.21.81 கோடி நிதியுதவி அளித்துள்ளன. இந்நிறுவனங்களின் ஊழியர்களும் தங்கள் ஊதியத்தில் இருந்தே நன்கொடையை வழங்கி உள்ளனர் என்று தகவல் அறியும்உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலில் தெரிய வந்துள்ளது.
இதேபோல் மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் வனத் துறை ஊழியர்கள் ரூ.1.14 கோடி, வெளியுறவுத் துறை ஊழியர்கள் ரூ.43.26 லட்சம், பாதுகாப்புத் துறை ஊழியர்கள் ரூ.26.20 லட்சம், சுகாதாரத் துறை ஊழியர்கள் ரூ.18.51 லட்சம் வழங்கி உள்ளனர்.