Published : 01 Sep 2015 10:26 AM
Last Updated : 01 Sep 2015 10:26 AM

மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்: கனிமொழி

மரண தண்டனையை முற்றிலும் அகற்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்திட வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுமார் ஒரு வருட ஆலோசனைகளுக்கும் கருத்தறிதல்களுக்கும் பிறகு இந்திய சட்ட ஆணையம் மரண தண்டனை பற்றிய தனது அறிக்கையை ஆகஸ்டு 31-ம் தேதி சமர்ப்பித்திருக்கிறது. அதில்,பெரும்பாலான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது தவிர்க்கப்படவேண்டும் என்ற ஆணையத்தின் பரிந்துரையை வரவேற்கிறேன்.

மரண தண்டணையை முற்றிலுமாக இப்போது ஒழிக்க முடியவில்லை எனினும் அதற்கான காலம் அருகில்தான் உள்ளது என நம்புகிறேன்.

கடந்த வருடம் ஜூன் மாதம் இந்திய சட்ட ஆணையத்துக்கு நான் எழுதிய கடிதத்தில் மரண தண்டனையை முற்றிலுமாக அகற்ற ஆதரவு தெரிவித்திருந்தேன். திமுக தலைவர் கருணாநிதியும் மரண தண்டனை முற்றிலுமாக சட்டப் புத்தகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டுமென எண்ணற்ற முறை வலியுறுத்தியிருக்கிறார்.

2014 பிப்ரவரியில் திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் மரண தண்டனையை ஒழிக்க பாடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கடந்த மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் மரண தண்டனை ஒழிப்பு முக்கிய இடம் பெற்றது.

கடந்த ஜூலை மாதம் மரண தண்டனை ஒழிப்பு பற்றி சட்ட ஆணையம் நடத்திய ஆலோசனையில் நான் கலந்து கொண்டேன். அப்போது நாட்டின் பல்வேறு சமூகங்களைப் பிரதிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், பெண்கள் அமைப்புகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்தனர். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் மரண தண்டனை ஒழிக்கக் கோரி கடந்த மாதம் தனிநபர் மசோதா கொண்டுவந்தேன்.

சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில், 'தீவிரவாதக் குற்றங்களை மற்ற குற்றங்களில் இருந்து வேறுபடுத்துவதற்கான வலுவான நியாயப்பாடுகள் இல்லை' என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் தீவிரவாத வழக்கு விசாரணைகளில் குற்றமே செய்யாதவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட்ட நீதி வழுக்கல்களும் நடந்துள்ளன. மேலும் நாட்டுக்கு எதிரான போர் செய்தல் போன்ற குற்ற வழக்குகளிலும் சட்டம் தவறாகவே பயன்படுத்தப்படுகிறது.

இந்த பின்னணியில் இந்திய சட்ட ஆணையம் மரண தண்டனைக்கு எதிராக கருத்து தெரிவித்த நிலையில், மரண தண்டனையை முற்றிலும் அகற்ற வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறேன். நாட்டு மக்கள் அனைவருக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்று கனிமொழி எம்.பி. அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x