நடப்பு நிதி ஆண்டில் ரூ.6,691 கோடி செலவில் சாலை மேம்பாட்டுப் பணிகள்: பேரவையில் அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு

நடப்பு நிதி ஆண்டில் ரூ.6,691 கோடி செலவில் சாலை மேம்பாட்டுப் பணிகள்: பேரவையில் அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு
Updated on
2 min read

நடப்பு நிதி ஆண்டில் ரூ.6,691 கோடி செலவில் சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவையில் நேற்று அறிவித்தார்.

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கை மீது உறுப்பினர்களின் விவாதத்துக்கு அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அளித்த பதில்:

கடந்த 4 ஆண்டுகளில் ரூ.12,263 கோடி செலவில் 21,156 கி.மீ. சாலைகள் அகலப்படுத்தப்பட்டும், மேம்படுத்தப்பட்டும் உள்ளன. மேலும், ரூ.1,384 கோடி செலவில் 646 பாலப் பணிகளும், ரூ.1,185 கோடி செலவில் 49 ரயில்வே மேம்பாலப் பணிகளும் ரூ.189 கோடி செலவில் 701 சிறுபால பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.

நடப்பு நிதி ஆண்டில் ரூ.6,691 கோடி செலவில் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2,800 கோடி செலவில் ஆயிரம் கி.மீ. சாலைகள் அகலப்படுத்தப்படும். 4 ஆயிரம் கி.மீ. சாலைகள் மேம்படுத்தப்படும்.

சென்னையில் பல்லாவரம் மற்றும் கொளத்தூரில் ரூ.231.88 கோடி செலவில் 3 பல்வழிச் சாலை மேம்பாலங்கள் கட்ட அரசு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது. திருவொற்றியூர் மாட்டுமந்தை பகுதியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும்.

ராமேஸ்வரம்-தனுஷ்கோடி வரையிலான ஒருவழித்தடச் சாலை 1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வீசிய கடும் புயல் மற்றும் கடல் சீற்றத்தால் முழுமையாக பாதிப்படைந்தது. தற்போது அங்கு அரிச்சல்முனை வரையில் 9.5 கி.மீ. தூரத்துக்கு ரூ.62 கோடி செலவில் மணற்பாங்கான பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதன்மூலம் சுற்றுலா பயணிகள், ராம் சேது எனப்படும் அரிச்சல் முனையையும், தனுஷ்கோடியை யும் கண்டு மகிழலாம்.

மதுரை மாநகரின் போக்கு வரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலிருந்து கப்ப லூர் வரை செல்லும் 27 கி.மீ. தூர மதுரை சுற்றுச்சாலை ரூ.200 கோடி செலவில் 4 வழிச் சாலையாக மாற்றப்படும். அங்கு 2 ரயில்வே மேம்பாலங்களும், ஒரு ஆற்றுப்பாலமும் கட்டப்படும்.

நாமக்கல்-திருச்செங்கோடு சாலையை ரூ.126 கோடி செலவில் 4 வழிச்சாலையாக அகலப்படுத்த முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இப்பணி நடப்பு ஆண்டில் மேற்கொள்ளப் படும்.

இவ்வாறு அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பின்னர் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

* சென்னை தாம்பரம் ரயில் நிலையம் அருகேயுள்ள நடை மேம்பாலத்தை ரயில் நிலை யத்துடன் இணைக்கும் வகையில் ரூ.7 கோடி செலவில் நடை மேம்பாலம் அமைக்கப்படும்.

* தருமபுரி-அரூர் சாலையில் அரசு பொறியியல் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் விபத்துகள் அடிக்கடி நிகழும் பகுதியில் மையத் தடுப்பான் அமைக்கப்பட்டு 4 வழித்தடமாக அகலப்படுத்தப்பட்டு வளைவுகள் நேர் செய்யப்படும்.

* நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள கொண்டி செட்டிப்பட்டியில் அடிக்கடி விபத்து நிகழும் ஆபத்தான இரு வளைவுகள் அகலப்படுத் தப்பட்டு மையத் தடுப்பான் அமைக்கப்படும்.

* மதுரையில் பாத்திமா கல்லூரி சந்திப்பு, மீனாட்சி மிஷன் மருத்துவமனை சந்திப்பு ஆகியவை போக்குவரத்து வசதிக் காக தலா ரூ.50 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.

* திருநெல்வேலி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, நெல்லை புறவழிச் சாலையையும், தாழை யூத்தையும் இணைக்கின்ற மதுரை-கன்னியாகுமரி சாலை, பேருந்து நிலையம் முதல் அரசு பொறியியல் கல்லூரி வரை (1.4 கி.மீ. தூரம்) ரூ.4 கோடி செலவில் அகலப்படுத்தப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in