

இந்திராகாந்தி பிரதமராக இருந்த காலத்தில் இருந்து குடியிருக்க இடம் கேட்டு மனு கொடுத்துவருவதாகவும், இன்னும் இடம் வழங்கப்படவில்லை என்றும் புலம்புகின்றனர் முட்டத்துவயல் இருளர் இன மலைவாசிகள்.
கோவையிலிருந்து பூண்டி செல்லும் சாலையில் செம்மேடு கிராமத்தை அடுத்து உள்ளது முட்டத்துவயல் கிராமம். இதிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ளது முட்டத்துவயல் குளத்தேரி. நொய்யலின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான நீலியாறும், அதற்கு குறுக்காக கட்டப்பட்டுள்ள நீலியணையும் இதன் அருகே உள்ளன. அதிலிருந்து பிரியும் வாய்க்கால், முட்டத்துவயல் குளத்தேரி அருகே செல்கிறது. இந்த குளத்தேரியின் அருகில் 20-க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர், மூங்கில்களால் வேயப்பட்ட வீடுகளில் வசித்து வருகின்றனர்.
சுற்றுவட்டாரத்தில் ஓரிரு கிமீ எல்லைக்குள் இவர்களது உறவினர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தோட்டத்து வயல்களில் குடிசைகள் போட்டு வாழ்ந்து வருகின்றனர். தங்களுக்கு சொந்தமாக வீடு அல்லது இடம் வழங்குமாறு அரசிடம் கடந்த 35 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மலைவாழ் மக்களுக்காக அரசிடம் கோரிக்கை வைத்துவரும் மடக்காடு பழனிசாமி கூறியதாவது:
இந்திராகாந்தி பிரதமராக இருந்த காலத்தில் இருந்து அதிகாரிகளிடம் இந்த மலைவாழ் மக்களுக்காக கோரிக்கை வைத்து வருகிறோம். கடந்த மாதம் 6-ம் தேதி கோவை ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம். மொத்தம் 75 குடும்பங்கள் சொந்தமா இடமோ, வீடோ இல்லாமல் உள்ளன. ‘முட்டத்துவயல் குளத்தேரி இடம் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமானது. இதில் பட்டா கொடுக்க முடியாது, எந்த நேரமும் காலி செய்ய வேண்டி வரும்’ என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அதனால் மாற்று இடம் கேட்டு 1982-ம் ஆண்டில் மனு கொடுத்தோம். இங்கு புறம்போக்கு நிலம் இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அதனால், புறம்போக்கு நில விவரம் சேகரித்து அதிகாரிகளிடம் கூறியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இங்கு குடியிருக்கும் வெள்ளியங்கிரி என்பவர் கூறும்போது, ‘நான் இங்கே குடிவந்து 30 வருஷம் ஆச்சு. என் பாட்டி குடியிருந்த வீட்டிலேதான் இப்ப நான் இருக்கேன். இப்படித்தான் மத்தவங்களும் 2 தலைமுறை, 3 தலைமுறையா குடியிருக்காங்க. இருந்தாலும் எந்த நேரம் அதிகாரிக வந்து வீட்டை காலி செய்யச் சொல்லுவாங்களோன்னு பயமா இருக்கு. பாம்பு, தேள் மத்தியில பாதுகாப்பில்லாம எத்தனை காலத்துக்குத்தான் இப்படி இருக்கணுமோ தெரியலை’ என்றார்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘நீர்வழிப் பாதைகளில் யாரும் குடியிருக்கக் கூடாது. அவர்களுக்கு மாற்றுஇடம் கொடுத்து அப்புறப்படுத்த வேண்டும் என்பது உச்ச நீதிமன்ற உத்தரவு.
நகர்புறப் பகுதிகளில் மட்டுமல்லாது, கிராமப் பகுதிகளிலும் இதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. முட்டத்துவயல் குளத்தேரி மாற்றுஇட கோரிக்கை எங்கள் பார்வைக்கு வரவில்லை’ என்றார்.