

நடப்பாண்டிலேயே மத்திய தொகுப்புக்கு அளிக்கப்படும் மருத்துவ இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இட ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, வைகோ இன்று (அக். 15) வெளியிட்ட அறிக்கை:
"மருத்துவப் படிப்புக்கான இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், பல் மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் மாநிலங்களிலிருந்து மத்திய தொகுப்புக்குக் கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 42 ஆயிரத்து 842 இடங்கள் அளிக்கப்பட்டு இருக்கின்றன. இதில் ஒரு இடம்கூட இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யாமல், மத்திய பாஜக அரசு சமூக நீதியைச் சவக்குழியில் தள்ளிவிட்டது.
இந்நிலையில்தான், மருத்துவப் படிப்புகளில் மாநிலங்கள் மத்தியத் தொகுப்புக்கு வழங்கும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு அளிக்கும் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு மற்றும் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 50 விழுக்காடு ஓபிசி இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ள மனுவில், மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் 27 விழுக்காடு மற்றும் தமிழகத்தில் பின்பற்றப்படும் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு 2020 -21 நடப்புக் கல்வி ஆண்டில் வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புக்கான இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், நடப்பாண்டில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று காரணம் கூறி உள்ள பாஜக அரசு, நடப்பாண்டில் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் 1,417 காலிப் பணியிடங்களை நிரப்பும்போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராகவும் பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இருந்தபோதிலும் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முனைந்து, முன்கூட்டியே அறிவிப்பாணை வெளியிட்டு இருக்கிறது.
அகில இந்தியத் தொகுப்புக்கு மாநில அரசுகளால் வழங்கப்படும் மருத்துவக் கல்வி இடங்களில், ஓபிசி மாணவர்களுக்கு சட்ட ரீதியாகக் கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது அநீதியாகும். பாஜக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
எனவே, நடப்பாண்டிலேயே மத்திய தொகுப்புக்கு அளிக்கப்படும் மருத்துவ இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இட ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்".
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.