

ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் நடந்த இரட்டைக் கொலையின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பழிக்கு ப்பழி வாங்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதில் 3 பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையைச் சேர்ந்த தர்மராஜ்(40) மற்றும் பாஸ் என்ற பாஸ்கரன்(42) ஆகியோரிடையே கஞ்சா விற்பதில் பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது.
இரு தரப்பினரும் அவ்வப்போது மோதிக் கொள்வதும், கொலை செய்வதும் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் 2018 மே 20-ல் தர்மராஜ் தரப்பைச் சேர்ந்த சிலர் பாஸ் தரப்பைச் சேர்ந்த பூமிநாதன்(32), விஜய்(26) ஆகியோரை நள்ளிரவில் கழுத்தறுத்து கொலை செய்தனர்.
இதற்கு பழிக்குப் பழியாக அதே ஆண்டு அக்.16-ல் இந்த இரட்டைக் கொலை வழக்கில் கேணிக்கரை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த தர்மராஜின் தம்பி கார்த்திக்(36), இவரது நண்பர் விக்கி என்ற விக்னேஸ்பிரபு(27) ஆகியோரை வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் பாஸ் தரப்பைச் சேர்ந்தவர்கள் கொலை செய்தனர்.
தொடர்ந்து 2 இரட்டைக் கொலைகள் நடந்ததால் கேணிக்கரை போலீஸார் வாலாந்தரவை கிராமத்தில் பாதுகாப்பை பலப்படுத்தினர்.
இந்நிலையில் இரட்டைக் கொலையின் முதலாமாண்டு நினைவு தினம் கடந்தாண்டு அக்.16-ல் வந்தது. அதற்கு முன்னதாக போலீஸார் கண்காணித்து 2019 அக்.15-ல் வாலாந்தரவையில் பாழடைந்த ரயில்வே கட்டிடத்தில் ஒரு நாட்டு வெடிகுண்டை கைப்பற்றினர்.
இந்நிலையில் இன்று (அக்.16) 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வாலாந்தரவையில் வெடிகுண்டு பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதனையடுத்து ராமநாதபுரம் டிஎஸ்பி வெள்ளைத்துரை தலைமையில் வெடிகுண்டு துப்பறியும் போலீஸார், மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஊராட்சி வார்டு உறுப்பினர் சுரேஷ் என்பவரது தோப்பில் இருந்து 2 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர்.
இதுதொடர்பாக தர்மராஜ், மற்றொறு தரப்பைச் சேர்ந்த பூமிநாதன்(42), வார்டு உறுப்பினர் சுரேஷ் (33) ஆகியோரை கேணிக்கரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் வாலாந்தரவை பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.