

மதுரையில் சட்டவிரோதமாக செயல்பட்ட 6 குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மழைநீரை சேமிக்கத் தவறியதால் நிலத்தடி நீர் பரவலாகவே குறைந்தது. அதனால், குடிநீர் மற்றும் அன்றாட வீட்டு உபயோகத்திற்கும் உள்ளாட்சி அமைப்புகள் வழங்கும் குடிநீரை மக்கள் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது.
ஆனால், உள்ளாட்சி அமைப்புகளால் முழுமையாக மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை. அப்படியே குடிநீர் வழங்கினாலும் பல இடங்களில் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை.
அதனால், நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள், பெரும்பாலும் குடிப்பதற்கும் தனியார் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து குடிநீர் கேன்களை விலைக்கு வாங்குகின்றனர்.
இந்த குடிநீர் நிறுவனங்கள் புறநகர்ப் பகுதிகளில் குடிநீர் ஆதாரமுள்ள இடங்களில் பல ஆயிரம் அடிக்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை இரவு, பகலாக உறிச்சி வணிக நோக்கில் மக்களுக்கு விற்கின்றனர். மதுரை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் பல அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கின்றன.
பலர் தரமில்லாமல் குடிநீரை தயாரித்து விற்கின்றனர். பலர், அனுமதியில்லாமல் லாரி, டிராக்டர்களில் தண்ணீரை எடுத்து சென்று மக்களுக்கு விற்கின்றனர்.
இவர்கள், பெரும்பாலும் அனுமதி பெற்று தொழில் நடத்துவதில்லை. தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கும் சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவது அதிகரித்துள்ளது.
நிலத்தடி நீர் எடுக்க அரசு பல்வேறு வழிகாட்டுதுல், கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல இடங்களில் ஆழ்துளை கிணறுகளே போடக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் உள்ளன.
குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், நிலத்தடி நீர் எடுக்க தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். அப்படி தடையில்லா சான்று வாங்காத 6 குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களை மாவட்ட நிர்வாகம் மூடியுள்ளது.
தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், சட்டவிரோதமாக டிராக்டர், லாரிகளில் தண்ணீரை எடுத்து விற்போர் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.