

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக பவனியாக கொண்டு செல்லப்பட்ட குமரி சுவாமி விக்ரகங்கள் இன்று களியக்காவிளை எல்லையில் கேரள தேவசம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது போலீஸார் துப்பாக்கி ஏந்தி நின்று மரியாதை செலுத்தினர்.
தமிழக, கேரள ஒற்றுமையை பறைசாற்றும் நிகழ்வான திருவிதாங்கூர் மன்னரின் உடைவாளை மாற்றும் நிகழ்வு கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் நேற்று நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், தேவாரக்கட்டு சரஸ்வதி, வேளிமலை முருகன் ஆகிய சுவாமி விக்ரகங்கள் பாரம்பரிய முறைப்படி பல்லக்கில் பவனியாக கொண்டு செல்லப்பட்டது.
கரோனா ஊரடங்கைத் தொடர்ந்து சமூக இடைவெளியுடன் ஆடம்பரமின்றி எளிமையான முறையில் இவ்விழா நடைபெற்றது.
சுவாமி விக்ரகங்கள் ஊர்வலம் குழித்துறை மகாதேவர் கோயிலை அடைந்ததும் அங்கு தங்கிய ஊர்வல குழுவினர் இன்று அதிகாலை புறப்பட்டு சென்றனர். தமிழக, கேரள எல்லையான களியக்காவிளையை சுவாமி விக்ரகங்கள் அடைந்ததும் அங்கு கேரள அரசு சார்பில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
பினனர் மன்னரின் உடைவாளையும், சுவாமி விக்ரகங்களையும் கேரள தேவசம் அதிகாரிகளிடம் தமிழக இந்து அறநிலையத்துறை, மற்றும் போலீஸார் ஒப்படைத்தனர். அந்நேரத்தில் கேரள போலீஸார் துப்பாக்கி ஏந்தி சுவாமி விக்ரகங்களுக்கு மரியாதை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் குமரி மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, திருவனந்தபுரம் எஸ்.பி. அசோக் குமார், கேரள தேவசம் ஆணையர் திருமேனி, இணை ஆணையர் உஷா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். சுவாமி விக்ரகங்கள் ஊர்வலம் இன்று கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை கிருஷ்ணசுவாமி கோயிலை அடைந்தது.
அங்கு பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் நாளை காலை புறப்பட்டு திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயலை அடைகிறது. அதைத்தொடர்ந்து வழக்கம்போல் நவராத்திரிவிழாவில் சுவாமி விக்ரங்கள் 10 நாள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது.