Last Updated : 15 Oct, 2020 05:21 PM

 

Published : 15 Oct 2020 05:21 PM
Last Updated : 15 Oct 2020 05:21 PM

அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி

மதுரை

அதிகாரிகள் அரசு வழங்கும் ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.

சென்னையை சேர்ந்த சூரிய பிரகாசம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் அதிகளவில் நெல் விவசாயம் நடைபெறும் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை விற்பனை செய்ய 10 முதல் 15 நாள் வரை காத்திருக்க வேண்டியதுள்ளது. இதனால் அறுவடை செய்யப்பட்டுள்ள நெல் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் சேதமடைகிறது.

எனவே விவசாயிகளை காப்பாற்ற மாநிலம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கவும், விவசாயிகளிடமிருந்து விரைவில் நெல் கொள்முதல் செய்ய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தனர்.

அப்போது நீதிபதிகள், "விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்க முடியாமல் ஒரு பக்கம் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மறுபுறம் நெல் கொள்முதல் செய்ய விவசாயிகளிடம் இருந்து அதிகாரிகள் லஞ்ம் பெறுகின்றனர். இது வேதனையானது. அதிகாரிகள் தங்களின் ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமமானது.

விவசாயிகள் கொண்டு வரும் ஒரு நெல் மணி முளைத்து வீண் போனாலும், அதற்கு காரணமான அதிகாரிகளிடம் அதற்கான பணத்தை வசூலிக்க வேண்டும். அப்போது தான் கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகள் தடுக்கப்படும்.

தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க, அவர்களிடமிருந்து விரைவில் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதற்கு நடவடிக்கை எடுத்ததாாக தெரியவில்லை.

கொள்முதல் செய்யப்படாததால் நெல் முளைத்துவிட்டதாக கூறி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே, தமிழகத்தில் எத்தனை நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன? கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது?

விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது தொடர்பாக நுகர்பொருள் வாணிப கழக இயக்குனர் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x