

இட ஒதுக்கீட்டிற்கு எதிராக செயல்படும் அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பாவை உடனே பதவிநீக்கம் செய்யவேண்டும், என திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி பேசினார்.
மத்திய அரசிற்கு அண்ணா பல்கலையை தாரைவார்க்க நினைக்கும் சென்னை அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி ரெட்டியார்சத்திரம் அருகேயுள்ள அண்ணா பல்கலை பொறியியில் கல்லூரி முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திமுக மாணவரணி மற்றும் இளைஞரணி சார்பில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அஸ்வின் பிரபாகரன் தலைமை வகித்தார்.
மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் சூரைராபர்ட், வெள்ளிமலை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது:
அண்ணா பல்கலை மூலம் வருடந்தோறும் நூற்றுக்கணக்கான ஏழை எளிய மாணவர்கள் பொறியாளராக தேர்வு பெற்றனர். 50 வருட பழைமையான அண்ணா பல்கலையை மத்திய அரசிடம் அடகுவைக்க அதிமுக அரசு பார்க்கிறது.
அண்ணாவின் பெயரில் கட்சியை நடத்திக்கொண்டு அண்ணா பெயரில் உள்ள பல்கலையை அழிக்க நினைக்கும் அதிமுக ஆட்சியின் அவலங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கவேண்டும்.
தமிழகத்தில் விவசாயம், தொழில்வளத்தை அழித்தவர்கள் தற்போது கல்வியை அழிக்க முடிவுசெய்துள்ளனர். இதற்காக கொண்டுவரப்பட்டவர் தான் அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா.
இட ஒதுக்கீட்டிற்கு எதிராக செயல்படும் சூரப்பாவை உடனே பதவிநீக்கம் செய்யவேண்டும், என்றார். ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய தலைவர் சிவகுருசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.