Last Updated : 15 Oct, 2020 04:31 PM

 

Published : 15 Oct 2020 04:31 PM
Last Updated : 15 Oct 2020 04:31 PM

அரசியல் காரணங்களுக்காக வேளாண் மசோதாக்களை எதிர்க்கட்சிகள் தடுக்க நினைக்கின்றன: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.கே.வாசன்

திருச்சி

அரசியல் காரணங்களுக்காக வேளாண் மசோதாக்களை எதிர்க்கட்சிகள் தடுக்க நினைக்கின்றன என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன் உருவப்படத் திறப்பு விழா, திருச்சியில் இன்று (அக். 15) கட்சியின் மாவட்டத் தலைவர் டி.குணா தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து, மறைந்த புலியூர் நாகராஜனின் உருவப்படத்தைத் திறந்துவைத்து, அவரது குடும்பத்துக்குக் கட்சி சார்பில் ரூ.3 லட்சம் ஆறுதல் தொகையை ஜி.கே.வாசன் வழங்கினார்.

இதில் பங்கேற்க வந்த ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "விவசாயிகளின் வளர்ச்சி, வருங்கால வருமானம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய வேளாண் மசோதாக்கள் அமைந்துள்ளன. விவசாயிகள் நலனில் நாடு ஒரே குரலில் இருக்க வேண்டும். இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் அரசியல் கட்சிகளுக்கு இருக்கக் கூடாது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள எதிர்க் கட்சிகள், கண்மூடித்தனமாக, அரசியல் காரணங்களுக்காக வேளாண் மசோதா குறித்து அச்சுறுத்தும் தகவல்களைக் கூறி வருகின்றனர்.

பல்வேறு சீர்திருத்தங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு, தெளிவுப்படுத்தப்பட்டு, முறைப்படுத்தப்பட்டு படிப்படியாகத்தான் வெற்றி பெற்றன. அந்த வகையில்தான் வேளாண் மசோதாக்களைப் பார்க்க வேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் முழுவதையும் கொள்முதல் செய்ய வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களை ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படுத்த வேண்டும்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொய்வின்றி ஈடுபட்டு வருகிறது. கரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு தொடர்ந்து செயல்பட வேண்டும். அறிவிக்கும் தளர்வுகளுக்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். மக்களும் மேலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

சட்டப்பேரவைத் தேர்தல் அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக கே.பழனிசாமி அறிவிக்கப்பட்டது, எதிர்கால வெற்றியை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது/

திருச்சி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால், பூக்களில் இருந்து நறுமனம் தயாரிக்கும் ஆலையை திருச்சியில் நிறுவ வேண்டும்.

புதுக்கோட்டை அக்னியாறு அணைக்கட்டு கால்வாயை அரசு உடனடியாக தூர்வார வேண்டும். நலிவடைந்த தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளுக்கு உரிய நிதியை ஒதுக்கி, விவசாயிகளுக்குக் கடன் கிடைக்கச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் யூரியா தட்டுப்பாட்டைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருச்சி- கடலூர் வழித்தடத்தில் பயணிகள் ரயிலை இயக்க வேண்டும். இது, விவசாய கூலித் தொழிலாளிகள் வேலைக்குச் சென்று வர மிகுந்த உதவியாக இருக்கும். டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் மாயனூர் முதல் நாகப்பட்டினம் வரை 44 இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். மணப்பாறை பாரதியார் நகர் பகுதியில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையடுத்து, அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் துணைவேந்தர் சூரப்பா செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதே?

பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்கள், இன்னும் அதிக பொறுப்பாக நடந்து கொள்வதுதான் நல்லது. குறிப்பாக, கல்வித் துறையில் வருங்கால மாணவர் நலன் மற்றும் நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பொறுப்புடன் செயல்படுவது மிக மிக முக்கியம்.

சட்டப்பேரவைத் தேர்தலில் தனிச் சின்னத்தில் தமாகா போட்டியிடுமா?

தனிச் சின்னத்தைப் பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஏனெனில், மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சிகள் அவரவர் சின்னத்தில்தான் போட்டியிட்டனர்.

சட்டப்பேரவைத் தேர்தலை எந்தக் கட்சி தலைமையில் சந்திப்பது என்று அதிமுக- பாஜக இடையே குழப்பம் இருப்பதாக கூறப்படுகிறதே?

அதுபோன்ற குழப்பம் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், கூட்டணியில் முதன்மைக் கட்சியாக அதிமுகதான் உள்ளது. இதில், பாஜக-வுக்கே மாற்றுக் கருத்து இருப்பதாகத் தெரியவில்லை.

பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக தமிழ்நாட்டின் உரிமைகளை முதல்வர் கே.பழனிசாமி பறிகொடுத்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறாரே?

தேர்தல் நெருங்க நெருங்க எதிர்க்கட்சிகள் ஒரு பொய்யைத் திரும்ப திரும்ப கூறி உண்மையாக்கி மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர். அது, ஒருபோதும் எடுபடாது. தவறு இருந்து சுட்டிக்காட்டினால் அதைத் திருத்திக் கொள்ளும் அரசாகவே உள்ளது. தவறு செய்ததாக எங்களுக்குத் தெரியவில்லை.

நீட் தேர்வு ரத்து, வேளாண் மசோதா ரத்து குறித்து திமுக வாக்குறுதி அளித்துள்ளதே?

எதிர்க்கட்சிகளிடம் மக்கள் இனி ஏமாற தயாராக இல்லை. பல விசயங்களிலும் நடைமுறைக்கு சாத்தியமில்லாததை நடைமுறைப்படுத்துவதாக கூறிக் கொண்டிருக்கின்றனர். மக்கள் விழிப்புடன் அவர்களை கவனித்துக் கொண்டு உள்ளனர். எது முடியும், முடியாது, எது நடக்கும், நடக்காது என்ற உண்மைநிலை மக்களுக்குத் தெரியும்.

சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் மாற்றம் வருமா?

இல்லாத ஒன்றைப் பற்றி நானாக கற்பனை செய்து இப்போது பதில் அளிக்க விரும்பவில்லை.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x