Last Updated : 15 Oct, 2020 04:15 PM

 

Published : 15 Oct 2020 04:15 PM
Last Updated : 15 Oct 2020 04:15 PM

குமரியில் தொடர் மழையால் மலையோர கிராமங்களில் போக்குவரத்து துண்டிப்பு: பேச்சிப்பாறை அணை கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மலையோர கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42 அடியை தாண்டியுள்ளதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகளில் மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையுள்ள கிராம, நகர பகுதிகள் எங்கும் கனமழை நீடித்து வருகிறது. இரணியலில் அதிகபட்சமாக 52 மிமீ., மழை பெய்துள்ளது.

சிற்றாறு ஒன்றில் 41 மிமீ., கன்னிமாரில் 20, குழித்துறையில் 18, நாகர்கோவிலில் 15, பேச்சிப்பாறை, பெருஞ்சாணியில் தலா 26, புத்தன் அணையில் 25, சிவலோகத்தில் 41, சுருளோட்டில் 31, தக்கலையில் 28, குளச்சலில் 36, பாலமோரில் 38, மாம்பழத்துறையாறில் 27, கோழிப்போர்விளையில் 20, அடையாமடையில் 37, குருந்தன்கோட்டில் 21, முள்ளங்கினாவிளையில் 22, ஆனைகிடங்கில் 34 மிமீ., மழை பெய்திருந்தது.

கனமழையால் ஆறு, கால்வாய்களில் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. ஏற்கனவே பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு அணைகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், குமரி மாவட்டத்தின் முக்கிய நீர்ஆதாரமான பேச்சிப்பாறை அணை இன்று காலை 42.60 அடியை எட்டியது. அணையின் முழு கொள்ளளவு 48 அடி என்ற நிலையில் விநாடிக்கு 3169 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வந்துகொண்டிருந்தது.

இதைத்தொடர்ந்து அணை பகுதியை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை நீர்ஆதார அதிகாரிகள் பேச்சிப்பாறை அணைப்பகுதி, மற்றும் பேச்சிப்பாறை அணை தண்ணீர் பாய்ந்தோடும் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். மழை நீடிப்பதால் எந்நேரத்திலும் அதிகமான கனஅடி தண்ணீர் திறந்துவிட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையுமாறு வலியுறுத்தப்பட்டது.

77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.80 அடியாக உயர்ந்தது. அணைக்கு 2434 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. முக்கடல் அணை 22 அடியாக உயர்ந்தது. மழையால் மாவட்டம் முழுவதும் மலையோர பகுதிகளில் 8க்கும் மேற்பட்ட ஓடு, மற்றும் கூரை வீடுகள் இடிந்து விழுந்தன.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, கீரிப்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மலையோர கிராமங்களில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அங்குள்ள சாலைகளை மூடியவாறு தண்ணீர் செல்கிறது. குறிப்பாக மோதிரமலை, குற்றியாறு, முடவன்பொற்றை, குழவியாறு, மிளாமலை பகுதிகளில் சாலைகளில் மழைநீர் நிரம்பியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மோதிரமலை சப்பாத்து பாலம் முழுமையாக மூழ்கி அடையாளமே தெரியாத வகையில் உள்ளது. அங்குள்ள கிழவியாற்றின் குறுக்கே பாலத்தை கடக்க முயன்ற இரு இளைஞர்களை மழைநீர் இழுத்து சென்றது.

பின்னர் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி அப்பகுதி மக்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர். சுசீந்திரம், தோவாளை, அருமநல்லூர் பகுதியில் கடைசி கட்ட அறுவடை பருவத்தில் நின்ற நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. குமரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கனமழை நீடித்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x