

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் 12 ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக, திமுக குற்றம்சாட்டியுள்ளது.
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 52 ஊராட்சிகளில் தாந்தாணி, பெரியாளூர், வல்லவாரி, அரசர்குளம் தென்பாதி, விஜயபுரம், மன்னகுடி, ரெத்தினக்கோட்டை, குளத்தூர், சிட்டங்காடு, கம்மங்காடு, திருநாளூர், நெய்வத்தளி ஆகிய 12 ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் செய்தும், நற்பவளக்குடி, மேல்மங்களம் ஆகிய 2 ஊராட்சிகளில் கூடுதல் பொறுப்புகளாக கவனித்துவந்த ஊராட்சி செயலாளர்களை மாற்றி அமைத்தும் அறந்தாங்கி வட்டார வளர்ச்சி அலுவலர் என்.அரசமணி, கடந்த 12-ம் தேதி உத்தரவிட்டார்.
கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் சமயத்தில் திடீரென பணியிட மாற்றம் செய்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்டுள்ள இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என, ஆலங்குடி திமுக எம்எல்ஏ சிவ.வீ.மெய்யநாதன், ஒன்றியக் குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் மற்றும் சுப.மணிமொழியன் தலைமையிலான ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பினர் ஆட்சியருக்குத் தனித்தனியாகக் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இது குறித்து எம்எல்ஏ சிவ.வீ.மெய்யநாதன் கூறுகையில், "ஊராட்சி ஒன்றியத் தலைவராக திமுகவைச் சேர்ந்த மகேஸ்வரி சண்முகநாதன் உள்ளார். இதேபோன்று, திமுக மற்றும் அதிமுக ஊராட்சித் தலைவர்கள் தனித்தனியாக ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பை உருவாக்கி உள்ளனர். அதில், திமுகவினர் கூட்டமைப்பில் அதிக எண்ணிக்கையிலான தலைவர்கள் உள்ளனர்.
இந்நிலையில், 14 ஊராட்சிகளில் அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்களுக்கு இடையூறாக உள்ள ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் செய்ய பரிந்துரைக்க வேண்டும் என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு செப்.20-ம் தேதி கையெழுத்திட்டு நாகுடி ஊராட்சித் தலைவர் ஆர்.சக்திவேல் தலைமையிலான அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு மனு அளித்தது.
இந்த மனு ஆட்சியரின் கவனத்துக்கு சென்றுள்ளது. பின்னர், மனு மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு அறந்தாங்கி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அக்.9-ம் தேதி ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவைப் பின்பற்றி, 14 ஊராட்சித் தலைவர்களையும் அதிமுகவினர் பரிந்துரைப் பட்டியலில் உள்ளவாறே இடமாறுதல் செய்து 12-ம் தேதி உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஊராட்சி செயலாளர்களைப் பழிவாங்கும் வகையிலான இந்த உத்தரவை ரத்து செய்யுமாறு ஆட்சியருக்குக் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது கண்டனத்துக்கு உரியது. உத்தரவை ரத்து செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார்