கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் சிறப்பு பிரார்த்தனை

கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீர ராகவ ராவ் | படங்கள்; எல். பாலச்சந்தர்
கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீர ராகவ ராவ் | படங்கள்; எல். பாலச்சந்தர்
Updated on
1 min read

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள கலாம் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் அரசு அதிகாரிகள் இன்று (வியாழக்கிழமை) அஞ்சலி செலுத்தினர்.

அப்துல் கலாமின் 89-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, ராமேசுவரம் பேக்கரும்பில் அமைந்துள்ள கலாமின் தேசிய நினைவகம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இன்று காலை ராமேசுவரத்தில் உள்ள பேக்கரும்பு அப்துல் கலாம் நினைவிடத்தில் கலாமின் பிறந்த தினத்தை முன்னிட்டு கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதின், மகள் நசிமா மரைக்காயர், பேரன்கள் ஷேக் தாவூத், ஷேக் சலீம் மற்றும் குடும்பத்தினர் இஸ்லாமிய முறைப்படி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

இதில் அனைத்து ராமேசுவரம் ஜமாத்தார்களும் கலந்து கொண்டனர். அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் கொ. வீர ராகவ ராவ், இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கழக அதிகாரிகளும் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளதால் கடந்த மார்ச் 18 அன்று ராமேசுவரத்தில் உள்ள அப்துல் கலாம் தேசிய நினைவகம் மூடப்பட்டது.

நினைவகம் திறக்கப்பட்டதிலிருந்து சுமார் 82 லட்சம் பார்வையாளர்கள் இந்த நினைவிடத்தை பார்வையிட்டுள்ளனர். வியாழக்கிழமை கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு கலாம் நினைவகம் தற்காலிகமாக திறக்கப்பட்டாலும் பொது மக்கள் அஞ்சலி செலுத்த நேற்று அனுமதி அளிக்கப்படவில்லை.

மேலும் கலாமின் பிறந்த தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளையின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் www.apjabdulkalamfoundation.org இணையதளத்தின் மூலம் நடத்தப்பட்டது.

இதில் கலாம் பிறந்த நாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் தலாய் லாமா கலந்து கொண்டு கலாமிற்கும் தமக்கும் உள்ள நட்பைப் பற்றி எடுத்துரைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in