கரோனா காலத்தில் இ-சேவை மையங்களை அதிகப்படுத்துக: தமிமுன் அன்சாரி கோரிக்கை

கரோனா காலத்தில் இ-சேவை மையங்களை அதிகப்படுத்துக: தமிமுன் அன்சாரி கோரிக்கை
Updated on
1 min read

மாநிலம் முழுவதும் இ-சேவை மையஙகளை அதிகளவில் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"கரோனா நோய்த்தொற்று காரணமாக மாநகராட்சி மற்றும் நகராட்சி ஊழியர்கள் நோய்த் தடுப்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் இப்பணிகளில் அதிக அக்கறை காட்டி வரும் நிலையில், வழக்கமான பணிகளைச் செய்திட, அங்கு ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது.

இந்நிலையில் இ-சேவை மைய ஊழியர்களையும், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்துவதாகத் தகவல்கள் வருகின்றன. நேரடியாக வரவேண்டாம் என்று பொதுமக்கள் வலியுறுத்தப்படுகிற தற்போதைய காலகட்டத்தில் இ- சேவை மையங்களின் சேவை அதிகம் தேவைப்படுகிறது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

கரோனா நோய்த்தொற்றிலிருந்து மீள அரசு வழங்கும் உதவிகள், புதிய தொழில் தொடங்க அரசு வழங்கும் வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு இ-சேவை மையம் மூலம் பல்வேறு இணையப் பணிகளைப் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

குறிப்பாக ஆதார் அட்டை விண்ணப்பித்தல் மற்றும் திருத்தம் செய்வது போன்ற தேவைகள் மக்களுக்கு அதிகம் உள்ளன.சென்னை போன்ற மாநகராட்சிகளில் இடவசதிகள் உள்ள குறிப்பிட்ட வங்கிகளில் மட்டுமே தற்போது இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது.

எனவே மக்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு தேவைக்கேற்ப இ-சேவை மையங்களை அதிக அளவில், பரவலாகத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்."

இவ்வாறு மு.தமிமுன் அன்சாரி தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in