

வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் கடலூரில் பெண் விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 15-ம் நாள் விவசாயப் பணிகளில் பெண்கள் அதிக அளவு பங்கேற்கவும் அவர்களை ஊக்குவிக்கவும், விவசாயத் தொழில் முனைவோராக மேம்படுத்தவும் பெண் விவசாயிகள் தினம் வேளாண்மைத் துறை மூலம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
கடலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இன்று பெண் விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது. கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முருகன் தலைமை தாங்கி விவசாயத் துறையில் பெண்களின் பங்களிப்பு குறித்து விளக்கிப் பேசி சாதனை புரிந்த பெண் விவசாயிகளுக்குப் பொன்னாடை அணிவித்தார்.
கடலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பூவராகன் வரவேற்றுப் பேசிய வேளாண்மைத்துறை மூலம் பெண் விவசாயிகளுக்குச் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள், பயிற்சிகள் மற்றும் மானிய விவரங்கள் பற்றி விளக்கினார்.
கடலூர் வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) ரமேஷ், மகளிர் குழு அமைத்து வேளாண்துறை திட்ட மானிய உதவிகளைப் பெறலாம் என்றும் வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூடுதல் செய்து கூடுதல் லாபம் பெறலாம் என்றும் தெரிவித்தார்.
வேளாண்மை துணை இயக்குநர் (நுண்ணீர்ப் பாசனம்) பூங்கோதை, பிரதமரின் விவசாய பாசன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தெளிப்புநீர்,சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து தண்ணீர் சிக்கனப்படுத்தி பாசனம் செய்யக் கேட்டுக்கொண்டார். சாதனைப் பெண் விவசாயிகளின் அனுபவங்கள் குறித்துப் படக்காட்சியும் ஒளிபரப்பப்பட்டது.
கடலூர் மாவட்ட சாதனைப் பெண் விவசாயிகள் காரணப்பட்டு ஜெயா, அன்னவல்லி முத்துலட்சுமி, சிவனார்புரம் தாட்சாயணி, நடுவீரப்பட்டு ஜெயக்கொடி ஆகியோர் தங்களது விவசாயத் தொழில் முனைவோர் அனுபவங்கள் குறித்து விளக்கினர்.
கடலூர் வேளாண்மை அலுவலர் சுகன்யா நன்றி கூறினார். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் அழகுமதி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜவேல் ஆகியோர் விழாவுக்கான ஒருங்கிணைப்பை செய்திருந்தனர்.