அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் ஒழுங்கீன நடவடிக்கைக்கு தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது: அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்

அமைச்சர் சி.வி.சண்முகம்: கோப்புப்படம்
அமைச்சர் சி.வி.சண்முகம்: கோப்புப்படம்
Updated on
1 min read

இட ஒதுக்கீட்டுக்குப் பாதகம் விளைவிக்கும் எந்தச் செயலையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது என, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் அரசு நிகழ்ச்சிகளில் இன்று (அக். 15) பங்கேற்ற சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"அண்ணா பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை சிறப்பு அந்தஸ்து பெற வேண்டி பல்கலைக்கழக துணைவேந்தர் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு அமைச்சர்கள் தலைமையில் குழு அமைத்து ஆராயப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது நிலுவையில் உள்ள நிலையில் சட்டப்பேரவையிலும் இதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்.

எந்த நிலையிலும், எந்தச் சூழலிலும் தமிழகத்தின் இட ஒதுக்கீட்டுக்குப் பாதகம் விளைவிக்கும் எந்தச் செயலையும் அரசு ஏற்றுக்கொள்ளாது எனக் கூறியுள்ளோம். சிறப்பு அந்தஸ்து பெற வேண்டியதில் உள்ள ஷரத்துகள் தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மூலம் கொண்டு வந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளன. இதற்கு விளக்கம் அளிக்கக் கோரியபோது விளக்கமளிக்க மறுத்துவிட்டனர்.

இது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்று எண்ணி கர்நாடகாவில் இருந்து நியமிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசை நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளார். நாங்களே நிதியாதாரம் திரட்டிக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எந்த வகையில் நிதியாதாரம் பெருக்கிக் கொள்வார் எனத் தெரியவில்லை. துணைவேந்தரின் இந்த ஒழுங்கீன நடவடிக்கைக்கு, தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது".

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in