

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது தமிழ் உணர்வாளர்களுக்கு வேதனையைத் தரும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று இலங்கைத் தமிழர்கள் சார்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. தொடர்ச்சியாக சமூக வலைதளத்திலும் இந்த எதிர்ப்பு எதிரொலித்து வருகிறது.
இயக்குநர்கள் பாரதிராஜா, சீனு ராமசாமி, சேரன் உள்ளிட்ட பலரும் '800' படத்தில் நடிக்க வேண்டாம் என்று விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (அக். 15) வெளியிட்ட அறிக்கை:
"கலையுலகில் தனக்கென ஒரு தனி இடம்பெற்றுத் தக்க வைத்து வரும் தன்னிகரில்லாதவர் தமிழ் நடிகர், தனிப்பெருங்கோ விஜய் சேதுபதி.
ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் போராட்டத்தின்போது அவர்களுக்கு விரோதமாக சிங்களப் பேரினவாதத்திற்குத் துணை நின்ற விபீடணன்தான் முத்தையா முரளிதரன். அவரது வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தாங்கள் நடிப்பது உலகெங்கும் உள்ள தமிழ் உணர்வாளர்களுக்கு வேதனையைத் தரும் விரும்பத்தகாத ஒன்று.
இதைத் தவிர்ப்பது தங்களுக்கு நல்லது. தொழிலுரிமையில் தலையிடுவது என்பது சரியா என்ற கேள்வி நியாயமானதுதான் என்றாலும், சில விதிகளுக்கு விலக்கு உண்டல்லவா?
கோடரிகளை விட ஆபத்தானவை கோடரிக் காம்புகள். எனவே, அத்தகைய ஒருவரின் வேடத்தில் நடிப்பதைத் தவிர்த்து தனித்ததோர் அடையாளத்தில் எழுவீராக!
விஜய் சேதுபதிக்கு இனப்படுகொலை எதிர்ப்பாளர்களான அனைத்து மனித நேயர்களின் வேண்டுகோள் இது!
பந்து உங்கள் களத்தில், முடிவு செய்க!".
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.