

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆறு வயதுச் சிறுவன் கண்களைக் கட்டிக்கொண்டு புதுச்சேரியில் மிதிவண்டியை ஓட்டினார்.
அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி வில்லியனூரைச் சேர்ந்த ஆறு வயதுச் சிறுவன் சாய் பிரணவ், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு எடுத்தார். தனது இரு கண்களைக் கட்டிக்கொண்டு மிதிவண்டி ஓட்டி, சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். புதுச்சேரி பாரதி பூங்கா அருகே எம்எல்ஏ லட்சுமி நாராயணன் இந்நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
இன்று (அக். 15) காலை சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு புதுச்சேரி பாரதி பூங்காவிலிருந்து நேரு சிலை வரை சிறுவன் கண்களைக் கட்டியபடி மிதிவண்டியை ஓட்டினார்.
இதைத் தொடர்ந்து சிறுவன் கூறுகையில், "இன்று கலாம் தாத்தா பிறந்த நாள். இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் தந்தவர். குழந்தைகள் தவறான தொடுதலால் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வை இவ்விஷயத்தில் ஏற்படுத்தவும், அது பற்றி விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தவுமே இம்முயற்சியை செய்தேன்" என்று தெரிவித்தார்.
அப்பகுதியில் சென்ற பலரும் அந்நிகழ்வைப் பார்த்து நிகழ்வுக்கான காரணத்தைக் கேட்டறிந்து சிறுவனைப் பாராட்டினர்.