சொத்து வரி விவகாரம்; தவறைத் தவிர்த்திருக்கலாம்; அனுபவமே பாடம்: ரஜினி ட்வீட்

ரஜினிகாந்த்: கோப்புப்படம்
ரஜினிகாந்த்: கோப்புப்படம்
Updated on
1 min read

தவறைத் தவிர்த்திருக்கலாம், அனுபவமே பாடம் என, ராகவேந்திரா மண்டப விவகாரம் குறித்து ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிக்குச் சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்தது. இந்த மண்டபத்திற்கு கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டு காலத்துக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சொத்து வரி செலுத்தும்படி, சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

பேரிடர் காலத்தில் இந்தத் தொகையை பாதியாக நிர்ணயிக்க விதிகள் உள்ளதால், அது தொடர்பாக குறைத்து முடிவெடுக்கும்படி, செப்டம்பர் 23-ம் தேதி மாநகராட்சிக்கு அனுப்பிய கடிதத்தின் மீது உரிய முடிவெடுக்கக் கோரி நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் நேற்று (அக். 14) விசாரணைக்கு வந்தது. அப்போது ரஜினி தரப்பில், "பாதி வரி வசூலிக்கும்படி அனுப்பிய கடிதத்தில் உரிய முடிவெடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்", என வாதிடப்பட்டது.

அதை ஏற்க மறுத்த நீதிபதி, செப்டம்பர் 23-ம் தேதி கடிதம் அனுப்பிவிட்டு செப்டம்பர் 29-ம் தேதியே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பீர்களா? எனக் கேள்வி எழுப்பினார்.

மாநகராட்சியிடம் மனு கொடுத்த ஒரு வாரத்தில் எப்படி வழக்குத் தொடர முடியும்? நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவகாசம் வேண்டாமா? எனத் தொடர்ந்து கேள்வி எழுப்பினார். நடவடிக்கை எடுக்காவிட்டால், நினைவூட்டல் கடிதம் அனுப்ப வேண்டும் என்ற நடைமுறையையும் பின்பற்றவில்லையா? நீதிமன்றம் என்ன மாநகராட்சி அலுவலகமா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கை கடுமையான அபராதம் விதித்து, தள்ளுபடி செய்யப்போவதாக நீதிபதி எச்சரித்தார். அதன் பின்னர், இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வாபஸ் பெற அனுமதித்த நீதிபதி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், இது தொடர்பாக, ரஜினி இன்று (அக். 15) தன் ட்விட்டர் பக்கத்தில், "ராகவேந்திரா மண்டப சொத்து வரி... நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். #அனுபவமே_பாடம்" எனப் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in