

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடை பெறுவதாக இருந்த அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்துக்கு ஆட்சியர் வர மிகவும் தாமதம் ஆனதால், அனைத்துக் கட்சி பிரமுகர்களும் கூட்டத்தை புறக் கணித்து வெளிநடப்பு செய்தனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், வாக்குச்சாவடி மையங்கள் அமைத்தல், வாக்குச் சாவடி முகவர் நியமனம் தொடர்பாக அனைத்துக் கட்சி பிரமுகர் களுடனான ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நேற்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கூட்டம் தொடங்குவதற்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆஜராகியிருந்தனர். மாலை 5.30 மணி ஆகியும் மாவட்ட ஆட்சியர் சாந்தா கூட்டத் துக்கு வரவில்லை.
இதனால் அதிருப்தியடைந்த அதிமுக நகரச் செயலாளர் ராஜபூபதி, திமுக நகரச் செயலாளர் எம்.பிரபாகரன், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வீ.ஞானசேகரன் உள்ளிட்ட அனைத்துக் கட்சி பிரமுகர்களும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜ பூபதி கூறும்போது, ‘‘மாவட்ட ஆட்சியர் நேற்று மாலை வேறு ஒரு முக்கியமான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.
அந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு அனைத்துக் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு வருவதற்கு தாமதமானது. அதற்குள் அவசரப்பட்டு அரசியல் கட்சி பிரமுகர்கள் வெளியேறிவிட்டனர். இதையடுத்து இந்தக் கூட்டம் அக்.16-ம் தேதி (நாளை) நடை பெறும் என்றார்.