

படவேடு அருகேயுள்ள மலை கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கமண்டல நதியின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் படவேடு அருகேயுள்ள ஜவ்வாது மலைத் தொடரில் உள்ள இருளம்பாறை, நடுவூர், தஞ்சான்பாறை, கீராகொல்லை, மேல் செண்பகத்தோப்பு, கீழ் செண்பகத் தோப்பு, நீர்தொம்பை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. அதேபோல், மலையடிவாரத்தில் மல்லிகாபுரம், கமண்டலபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த வர்கள் என சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கல்வி, வேலை, வியாபாரம் என பல்வேறு அடிப்படை தேவைகளுக்கும் படவேடு கிராமத்தையே நம்பி உள்ளனர்.
மலை கிராம மக்கள் புளி, தேன் சேகரித்து விற்பனை செய்தல், ஆடு, மாடு வளர்த்தல், நெல், சாமை உள்ளிட்ட பயிர்களையும் பயிரிட்டுள்ளனர். சிலர் மலைப் பகுதியில் கிடைக்கும் விறகுகளை வெட்டி படவேடு கிராமத்தில் விற்று வருகின்றனர். மேலும், படவேட்டில் இருந்து காய்கறி, மளிகை, மருந்து பொருட்களையும் தினசரி வாங்கிச் செல்கின்றனர்.
இவர்கள், அதிகம் நம்பியிருக் கும் படவேடு கிராமத்துக்குச் செல்ல ஜவ்வாதுமலையில் இருந்து உருவாகி மல்லிகாபுரம், கமண்டலாபுரம் கிராமங்கள் வழியாகச் செல்லும் கமண்டல ஆற்றை கடந்து செல்ல வேண்டி யுள்ளது. தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவ மழை காலங்களில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் இப்பகுதி மக்கள் ஆற்றைக் கடக்க சிரமப்படுகின்றனர். எனவே, கமண்டல நதியின் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
ஜவ்வாது மலைத் தொடரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் தற்போது ஆற்றில் நீர்வரத்து உள்ளது. வழக்கம்போல், வியாபாரத்துக்காக வரும் பொதுமக்கள் ஆற்றை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். விரைவில், வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்பதால் இன்னும் அதிக சிரமத்துக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்பதால் தரைப்பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் அமுல்ராஜ் கூறும்போது, ‘‘மலை கிராம மக்கள் மற்றும் மலையையொட்டி அமைந்துள்ள கிராமங்களில் வசிப்பவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை அரசும் மாவட்ட நிர்வாகமும் கிடப்பில் போட்டுள்ளனர். ஒவ் வொரு ஆண்டும் மழைக் காலம் தொடங்கினால் பாதிக்கப்படுவது மக்கள்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தரைப் பாலம் அமைக்க அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள். இதுவரை ஆய்வு முடிவு என்னவானது என தெரியவில்லை. தரைப் பாலம் இருந்தால் அவர்கள் வியாபாரத்துக்காக படவேடு கிராமத்துக்கு சுலபமாக வந்து செல்ல முடியும்.
மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு அதிகமானால் பொது மக்கள் ஆற்றைக் கடக்க சிரமம் என்பதால் வெள்ள நீரை சமாளிக்க கான்கிரீட் தடுப்பையும், கருங்கற்களையும் ஆற்றில் கொட்டி தடை ஏற்படுத்தியுள்ளனர். இது பாதுகாப்பானது இல்லை. தரைப்பாலம் கட்டிக் கொடுத்தால் மட்டுமே நன்றாக இருக்கும்.
ஜவ்வாது மலைத் தொடரில் உள்ள மலைகிராம மக்களின் தேவைகளை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்ற முன்வரவேண்டும். இதன்மூலம் மலை கிராம மக்கள் தவறான பாதைக்கு செல் வதை தடுக்க முடியும். மலை கிராம மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தார்