Published : 15 Oct 2020 10:45 AM
Last Updated : 15 Oct 2020 10:45 AM

வங்கிப் பணிகளில் பொருளாதார ரீதியில் நலிந்தோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு: அவசர அவசரமாக அமல்படுத்த வேண்டிய அவசியம் என்ன? - கே.எஸ்.அழகிரி கேள்வி

பொருளாதார ரீதியில் நலிந்தோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை மோடி அரசு அவசர, அவசரமாக அமல்படுத்த வேண்டிய அவசியம் என்ன என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (அக். 15) வெளியிட்ட அறிக்கை:

"பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை பாஜக அரசு கொண்டு வந்தபோது, இது ஏற்கெனவே இட ஒதுக்கீடு பெற்று வரும் மற்ற பிரிவினரைப் பாதிக்காது என்று கூறப்பட்டது.

ஆனால், சமீபத்தில் ஐபிபிஎஸ் எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், பிற பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து எடுத்து, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நடைமுறையில் எஸ்.சி., பிரிவினருக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளது. தற்போது 13 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எஸ்.டி., பிரிவினருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்குப் பதிலாக, 6 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 21 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கான 50 சதவீதம் 40.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மட்டும் 10 சதவீதமாகவே தொடர்கிறது.

மற்ற பிரிவினரிடம் இருந்த இட ஒதுக்கீட்டை, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்குப் பறித்துக் கொடுத்தால், அது அரசியல் சாசனத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும்.

கடந்த ஆண்டு ஸ்டேட் வங்கிப் பணியாளர் நியமனத்தில், பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. அப்போது, மற்ற பிரிவினருக்கான இட ஒதுக்கீடுகளில் கை வைக்கவில்லை. பொதுப் பிரிவில் மட்டும் குறைக்கப்பட்டது.

தற்போது வங்கிகளில் காலியாகவுள்ள 1,417 இடங்களுக்கு ஆட்களை நிரப்ப வேண்டும். அந்த வகையில் பிற பின்தங்கிய வகுப்பினருக்கு 300 இடங்களும், எஸ்.சி., பிரிவினருக்கு 196 இடங்களும், எஸ்.டி., பிரிவினருக்கு 89 இடங்களும் மட்டுமே கிடைக்கும். பொதுப் பட்டியலில் வருவோருக்கு 690 இடங்கள் கிடைக்கும். அதேசமயம், 10 சதவீத இட ஒதுக்கீடு பெற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 142 இடங்கள் கிடைக்கும் என்பதுதான் விநோதம்.

பிற பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்டி., பிரிவினரிடமிருந்து 142 வங்கிப் பணியிடங்களை எடுத்து, உயர் சாதியினருக்கு மத்திய பாஜக அரசு வழங்குகிறது.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, பொருளாதார ரீதியில் நலிந்தோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை மோடி அரசு அவசர, அவசரமாக அமல்படுத்த வேண்டிய அவசியம் என்ன? இந்த அநீதியை ஒருபோதும் ஏற்க முடியாது".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x