

கொங்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 21-ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 21-ம் தேதி புதன்கிழமை, காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும்.
கட்சி ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசிக்க நடைபெறும் இக்கூட்டத்தில் எதிர்பார்க்கப்படும் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
2006 தேர்தலில் திமுக ஆட்சி அமைத்தாலும் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதற்கு கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு ஏற்பட்ட பின்னடைவே காரணம். 2011, 2016 தேர்தல்களிலும் கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு சொற்ப இடங்களே கிடைத்தன.
அதனால் இந்த முறை கொங்கு மண்டலத்தில் கணிசமான இடங்தளைப் பிடிக்க திமுக வியூகம் வகுத்து வருகிறது.
இநநிலையில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.