

மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் தொலைத் தொடர்பு பயன்பாட்டுக்கு அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களின் சேவையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் வரவேற்றுள்ளது.
இதுகுறித்து, மத்திய தொலைத் தொடர்பு துறை இயக்குநர் (பொதுத்துறை நிறுவனங்கள் விவகாரம்)ஜிதின் பன்சால் வெளியிட்டு உள்ள உத்தரவில், “அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் தொலைபேசி, பிராட்பேண்ட், லீஸ் லைன் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் அரசுநிறுவனமான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மத்திய அரசின் இந்த உத்தரவை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் வரவேற்றுள்ளது.
இதுதொடர்பாக, பிஎஸ்என்எல் தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் மாநில செயலாளர் சி.கே.மதிவாணன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், “ஊழியர்களுக்கு மாதம்தோறும் ஊதியம்கூட கொடுக்க இயலாத படுமோசமான நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை கைத்தூக்கிவிட மத்தியஅரசு எடுத்திருக்கும் நல்ல முடிவைவரவேற்கிறோம்.
இதனால், பிஎஸ்என்எல் நிறுவனம் நிச்சயம் நல்ல பயனை அடையும். அத்துடன், எங்களது நீண்டநாள் கோரிக்கையும் நிறைவேறி உள்ளது” என தெரிவித்துள்ளார்.