

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைதயாரிக்க திமுக குழு அமைத்துள்ளது. அக்கட்சியின் முந்தைய தேர்தல் அறிக்கைகள்போல இதுவும் ஜீரோவாகத்தான் இருக்கும்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் விவசாயிகள் ஆதரித்து வருகின்றனர். ஆனால், மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஏதாவது பிரச்சினையை உருவாக்கும் வகையில், வேளாண் சட்டங்களை வைத்து விவசாயிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றனர். ஆனால், விவசாயிகளும் விவசாய சங்கப் பிரதிநிதிகளும் உண்மையை உணர்ந்துகொண்டதால் எதிர்க்கட்சிகளின் முயற்சி பலிக்கவில்லை.
பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்களை அவமானப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூகத்தில் ஒற்றுமை ஏற்பட, கவுன்சலிங் கொடுக்க குழுக்கள் அமைக்க வேண்டும். எஸ்.சி. ஆணைய துணைத் தலைவராக இருந்த போதிலிருந்தே இதை வலியுறுத்தி வருகிறேன்.
எஸ்.சி. ஊராட்சித் தலைவரை அவமதித்த திமுக ஊராட்சி துணைதலைவர் மீது அக்கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பட்டியலின மக்கள் குறித்து தவறாக பேசிய திமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதும் நடவடிக்கை இல்லை. ஆனால், மக்களை திசைதிருப்ப திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.