

மழைக்கால நோய்கள் பரவாமல்தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
உலக கை கழுவும் தினத்தையொட்டி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. செவிலியர் மாணவிகள் கைகளைக் கழுவி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவமனை டீன் வசந்தாமணி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பிறகுசெய்தியாளர்களிடம் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
உலக கை கழுவும் தினம் 2008-ம்ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. முன்பைவிட கை கழுவும் அவசியத்தை தற்போது நாம் உணர்ந்துள்ளோம்.
கை கழுவுதல், முகக் கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை கடைபிடிப்பதால் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தலாம். வடகிழக்கு பருவமழைதொடங்கியுள்ள நிலையில், மழைக்கால நோய்கள் பரவாத வண்ணம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
3 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் கூட்டமாக கூடும் இடங்கள் மற்றும் நோய் பரவும் பகுதிகள் கண்டறியப்பட்டு, தொடர்புடைய ஆட்சியர்கள் மூலம் குழுக்கள் அமைக்கப்பட்டு நோய்தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கரோனா தொற்று இறப்பு சதவீதத்தை குறைக்க இரவு நேரங்களில் நோயாளிகளை மருத்துவமனைகளில் அனுமதிக்க நடமாடும்மருத்துவ வாகன திட்டம் இந்த மருத்துவமனையில் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.