

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை தினங்களை முன்னிட்டு நாடுமுழுவதும் 196 சிறப்பு ரயில்களை இயக்கரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதில், தெற்கு ரயில்வேயில் 4 சிறப்பு ரயில்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கரோனா தொற்றால் நாடு முழுவதும் வழக்கமாக இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு பல்வேறு வழித்தடங்களில் 300-க்கும் மேற்பட்ட சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதற்கிடையே, ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை நெருங்கவுள்ளதால், பயணிகளின் தேவையைக் கருதி, ரயில்வே மண்டலங்கள் சார்பில் ரயில்களின் பட்டியலை ரயில்வே வாரியத்துக்கு அனுப்பியுள்ளன. மேலும், அந்தந்த மாநில அரசுகளின் அனுமதியின்படி சிறப்புரயில்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டன. அதன்படி, பல்வேறு முக்கியவழித்தடங்களில் 196 சிறப்பு ரயில்களை (392 இணை ரயில்களாக) அக்.20 முதல் நவ.30 வரை இயக்க, ரயில்வே வாரியம் அனுமதி அளித் துள்ளது.
பெரும்பாலான மண்டலங்களில் தலா 10-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தெற்கு ரயில்வேசார்பில் சென்னை எழும்பூர் - நாகர்கோவில் (02657/02658), திருவனந்தபுரம் - சாலிமார் (02641/02642),கன்னியாகுமரி - ஹவுரா (02666/02665), மதுரை - பிகானீர் (02631/02632) ஆகிய தடங்களில் 4 சிறப்புரயில்கள் மட்டுமே இயக்கப்படஉள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பயணிகள் சிலர்கூறும்போது, ‘‘வழக்கமான பயணிகள் ரயில்கள் இயக்கப்படாத நிலையில், தெற்கு ரயில்வே சார்பில், ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை நாட்களில் 4 சிறப்பு ரயில்கள்மட்டுமே இயக்கப்படும் என்ற அறிவிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்மாவட்டங்கள் போன்ற நீண்டதூரம் செல்லும் பயணிகள், ரயில் பயணத்தை மட்டுமே நம்பியுள்ளனர். எனவே, பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு கூடுதல் ரயில்கள் இயக்க ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.
அதிகாரிகள் கருத்து
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கரோனா ஊரடங்கு சூழ்நிலையில், சிறப்பு ரயில்கள் இயக்கம் தொடர்பாக அந்தந்த மாநிலஅரசு சார்பில் தேவையின் அடிப்படையில் அளிக்கும் பட்டியலைக் கொண்டே ரயில்வே துறை சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. தேவையின் அடிப்படையில் அடுத்தபட்டியலில் தெற்கு ரயில்வேயில் கூடுதல் ரயில்களை இயக்க, வாரியம் அனுமதி வழங்க வாய்ப்புகள் இருக்கின்றன’’ என்றனர்.
மதுரை, கோவை, நிஜாமுதீனுக்கு சிறப்பு ரயில்
பண்டிகைக் கால கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து மதுரை, கோவை, நிஜாமுதீன், சந்திரகாச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி, சென்னை சென்ட்ரல் - மதுரை (06019/06020) இடையே வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் ஏசி அதிவிரைவு ரயில் இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் (06027/06028) சிறப்பு ரயில் செவ்வாய் தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரல் - நிஜாமுதீன் (02269/02270) சிறப்பு ரயில் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படவுள்ளது. சந்திரகாச்சி - சென்னை சென்ட்ரல் - சந்திரகாச்சி (02807/02808) இடையே வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (அக்.15) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.