

`தமிழக இளைஞர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். இனத்துரோ கிகளை தமிழர்கள் மறந்துவிடக் கூடாது. 10 லட்சம் இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்’ என்று திருநெல்வேலியில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.
இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க அனைத்து உலக நாடுகளை வலியுறுத்தியும், இலங்கை அரசுக்கு துணைபோகாமல் பன்னாட்டு நீதி விசாரணைக்கான தீர்மானத்தை மனித உரிமைக் கவுன்சிலில் இந்திய அரசு முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தியும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் நடைபெற்ற போராட்டத்தில் வைகோ பேசியதாவது:
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் குறித்து உள்நாட்டு விசாரணை ஏற்கத்தக்கது அல்ல. பன்னாட்டு விசாரணை அவசியம் வேண்டும். சுதந்திர தமிழ் ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள 65 ஆயிரம் ஈழத்தமிழர்களிடமும் அந்த வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்கக் கூடாது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் பன்னாட்டு நீதி விசாரணை தீர்மானம் கொண்டு வர வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற் றப்பட்டுள்ள தீர்மானத்தை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஜெனீவாவில் லட்சக்கணக்கான தமிழர்கள் பேரணி நடத்துகின்றனர்.
இலங்கை தமிழர்கள் படுகொ லைக்கு திமுகவும், காங்கிரஸும் காரணமாக இருந்தன. முத்துக்குமார் உயிர்நீத்தபோது மத்திய அரசு பற்றியும், பிரபாகரன் பற்றியும் பேசக்கூடாது என்று கூறியவர் ராமதாஸ். தனது மகன் மத்திய அமைச்சரவையில் இருந்ததால் அவர் அப்படி கூறினார். அதே காரணத்துக்காக திமுகவும் வாய் திறக்கவில்லை.
இளைஞர்கள் போராட வேண்டும்
தமிழக இளைஞர்கள் விழித்துக்கொள்ள வேண்டும். இனத்துரோகிகளை தமிழர்கள் மறந்துவிடக்கூடாது. 10 லட்சம் தமிழ் இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும். இவ்வாறு வைகோ கூறினார்.
திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ப.ஆ.சரவணன், எஸ்.பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இனப்படுகொலை
செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “டிஎஸ்பி விஷ்ணுபிரியா வழக்கு தற்கொலை அல்ல. அது கொலை. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். வேளாண் அதிகாரி நெல்லை முத்துக்குமாரசாமி வழக்குபோல் இந்த வழக்கும் ஆகிவிடக்கூடாது” என்று தெரிவித்தார்.