அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியிலிருந்து சூரப்பாவை நீக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயற்குழு தீர்மானம் 

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியிலிருந்து சூரப்பாவை நீக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயற்குழு தீர்மானம் 

Published on

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியிலிருந்து சூரப்பாவை நீக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. மாநிலத்தலைவர் என்.ரெஜீஸ்குமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் பாலா முன்னிலை வகித்தார்.

மாநில நிர்வாகிகள் பாலசந்திரபோஸ், மணிகண்டன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் விஷ்ணுவர்தன், மாவட்ட செயலாளர் பாலாஜி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அண்ணா பல்கலை தமிழக அரசால் நிறுவப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

பல சாதனையாளர்களை இந்த பல்கலை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் உயர்புகழ் நிறுவனம் என்ற பெயரில் பல்கலையை அபகரிக்கும் முயற்சியில் மத்திய பா.ஜ., அரசு ஈடுபட்டுவருகிறது.

இந்த பல்கலை மாநில அரசின் கட்டுப்பாட்டில் தொடர்வதை தமிழக அரசு உறுதிப்படுத்தவேண்டும். மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

மேலும் துணைவேந்தர் பதவியிலிருந்து சூரப்பாவை நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என செயற்குழு வலியுறுத்துகிறது.

மத்திய அரசு பணியில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு, நீட்தேர்வு திணிப்பு, எல்.ஐ.சி., உள்ளிட்ட நிறுவனங்களின் கடிதங்களில் தமிழ் மொழி புறக்கணிப்பு, ஜி.எஸ்.டி.,வரி பங்கீட்டை வழங்க மறுப்பது உள்ளிட்ட மதிழக நலனை புறக்கணிக்கும் மத்திய அரசை கண்டித்து அக்டோபர் 27 ம் தேதி இணையவழி சிறப்பு மாநாடு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

உள்ளாட்சி அமைப்புகளில் ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகத்தை சேர்ந்த தலைவர்களை அவமதிக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். தமிழக அரசு ஆய்வு நடத்திய ஆதிதிராவிடர் ஊராட்சித்தலைவர்கள் சுயமாக செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in