

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வனப்பகுதியில் நோய்வாய்ப்பட்ட யானை உயிரிழந்தது.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாக இந்த யானை உலவியது. கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் மலையடிவாரத்தில் உள்ள 80 அடி கால்வாய் அருகே இந்த யானை நடமாட்டம் நேற்று காணப்பட்டது.
உடல் மெலிந்த நிலையில் நடக்க முடியாமல் சோர்ந்து ஆங்காங்கே படுத்து இளைப்பாறிய இந்த யானையை மீட்டு மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.
ஆனால் வனத்துறையினர் யானையை மீட்டு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் மலைப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் அந்த யானை இன்று இறந்து கிடந்தது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வனத்துறையினரும் மருத்துவ குழுவினரும் அங்குவந்து யானையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்தபின் மணிமுத்தாறு வனப்பகுதியில் குழிதோண்டி புதைத்தனர்.