Last Updated : 14 Oct, 2020 05:06 PM

 

Published : 14 Oct 2020 05:06 PM
Last Updated : 14 Oct 2020 05:06 PM

2016 முதல் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன?- தமிழக அரசு தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

தமிழகத்தில் தேர்தல் அறிக்கையில் கூறியபடி 2016-ம் ஆண்டு முதல் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதின்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலர் கருப்பையா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
அறந்தாங்கியிலிருந்து 30 கி.மீட்டர் தூரத்தில் அரசர்குளம் கிராமத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை பொதுமக்கள் எதிர்ப்பால் மூடப்பட்டது.

அந்தக் கடையை அறந்தாங்கி- காரைக்குடி நெடுஞ்சாலையில் சோதனைச் சாவடி அருகே திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இப்பகுதி அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். பள்ளிகள், கோயில்கள், திருமண மண்டபம் அமைந்துள்ளது. இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே டாஸ்மாக் கடை திறக்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் முத்தல்ராஜ், பழனியாண்டி வாதிட்டனர்.

விசாரணையின் போது நீதிபதிகள், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் 5 ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி 2016 முதல் 2019 வரை எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன?

ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் கடைகளால் எவ்வளவு வருமானம் வந்தது? என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் மாதத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x