Published : 25 Sep 2015 12:09 PM
Last Updated : 25 Sep 2015 12:09 PM

ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி பலியான தமிழர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்

ஹஜ் புனித் யாத்திரை நெரிசலில் சிக்கி பலியான 3 தமிழர்கள் குடும்பத்தாருக்கும் முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மெக்கா புனித ஹஜ் பயணத்தின் போது, 24.9.2015 அன்று சவூதி அரேபியாவின், மினா நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 700-க்கும் மேற்பட்ட புனித ஹஜ் யாத்ரீகர்கள் உயிரிழந்தனர் என்பதையும், 800க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்பதையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

மேலும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி வாயிலாக புனித யாத்திரை மேற்கொண்ட நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையைச் சேர்ந்த சம்சுதின் முகமது இப்ராகிம், திருநெல்வேலி மாவட்டம், தென்காசியைச் சேர்ந்த முகைதீன் பிச்சை மற்றும் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ரெமிஜன் ஆகியோர் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x